search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா
    X

    ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா

    மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுவதுமாக கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா.
    ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது.

    ஏற்கனவே முடிந்துள்ள இரண்டு பேட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நியூசிலாந்து களம் இறங்கியது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் வார்னர் மற்றும் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிஞ்ச் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்மித் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் போல்ட் வீழ்த்தினார்.

    அதன்பின் வந்த பெய்லி (23), மிட்செல் மார்ஷ் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, ஆஸ்திரேலியா 73 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

    ஒருபக்கம் விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் வார்னர் அதிரடி தாக்குதல் நடத்தினார். அவருக்குத் துணையாக 6-வது நபராக களம் இறங்கிய ஹெட், வார்னர் அதிரடியாக விளையாட ஒத்துழைப்பு கொடுத்தார்.



    சதத்தை கடந்த வார்னர் 50-வது ஓவரின் கடைசி பந்தில் 156 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார். அவர் 128 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் இந்த ரன்னை எடுத்தார். இவரது சதத்தால் ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. அந்த அணி 36.1 ஓவரில் 147 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி சார்பில் தொடக்க வீரர் கப்தில் மட்டும் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும் கம்மின்ஸ், பால்க்னெர் மற்றும் ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.



    இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணியை 3-0 என ஆஸ்திரேலியா ஒயிட்வாஷ் செய்தது. கடந்த போட்டியிலும் இந்த போட்டியிலும் சதம் அடித்த வார்னர் ஆட்ட நாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.
    Next Story
    ×