search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜூனியர் உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி: லக்னோவில் இன்று தொடக்கம்
    X

    ஜூனியர் உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி: லக்னோவில் இன்று தொடக்கம்

    16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி லக்னோவில் இன்று தொடங்குகிறது.
    லக்னோ:

    16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி லக்னோவில் இன்று தொடங்குகிறது.

    11-வது ஜூனியர் உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் இன்று (வியாழக்கிழமை) முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.

    இதன்படி ‘ஏ’ பிரிவில் முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா (2005), ஆஸ்திரேலியா (1997) மற்றும் ஆஸ்திரியா, தென் கொரியா அணிகளும், ‘பி’ பிரிவில் பெல்ஜியம், எகிப்து, மலேசியா, நெதர்லாந்து அணிகளும், ‘சி’ பிரிவில் 6 முறை சாம்பியனான ஜெர்மனி (1982, 1985, 1989, 1993, 2009, 2013), ஜப்பான், நியூசிலாந்து, ஸ்பெயின் அணிகளும், ‘டி’ பிரிவில் முன்னாள் சாம்பியனான இந்தியா (2001), கனடா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளும் இடம் பிடித்துள்ளன.

    1979-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் அணி விசா உள்ளிட்ட பிரச்சினை காரணமாக கடைசி நேரத்தில் இந்த போட்டியில் இருந்து விலகியது. அதற்கு பதிலாக மலேசியா அணி சேர்க்கப்பட்டது.

    கடந்த 2 முறை தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்ற ஜெர்மனி அணி ‘ஹாட்ரிக்’ பட்டத்தை குறிவைத்து களம் காணுகிறது. சொந்த மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்ல ஹர்ஜீத்சிங் தலைமையிலான இந்திய அணி முழு பலத்தை வெளிப்படுத்தும்.

    1997-ம் ஆண்டு நடந்த போட்டியில் 2-வது இடத்தை பிடித்த இந்திய அணி, 2001-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதுவே ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் சிறந்த செயல்பாடாகும். கடைசியாக 2013-ம் ஆண்டில் டெல்லியில் நடந்த போட்டியில் இந்திய அணி 10-வது இடமே பிடித்தது.

    இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-ஜப்பான் அணிகள் (பகல் 11.30 மணி) மோதுகின்றன. மற்ற ஆட்டங்களில் ஜெர்மனி-ஸ்பெயின் (பகல் 1.30 மணி), இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா (பிற்பகல் 3.30 மணி), இந்தியா-கனடா (இரவு 7 மணி) அணிகள் சந்திக்கின்றன.

    இந்திய அணி அடுத்த லீக் ஆட்டங்களில் 10-ந் தேதி இங்கிலாந்தையும், 12-ந் தேதி தென் ஆப்பிரிக்காவையும் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டங்கள் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி தொடர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 4 சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    போட்டி குறித்து இந்திய ஆக்கி அணியின் கேப்டனான பஞ்சாபை சேர்ந்த ஹர்ஜீத்சிங் அளித்த பேட்டியில், இந்த தொடருக்காக நாங்கள் நிறைய திட்டங்களுடன் தயாராகி இருக்கிறோம். இந்தியாவுக்காக இந்த கோப்பையை வெல்ல விரும்புகிறோம். பயிற்சியாளரின் அறிவுரையின் படி எங்களது வியூகங்களை சரியாக செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம்’ என்றார். 
    Next Story
    ×