search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை டெஸ்ட் போட்டியிலும் பார்த்தீவ் பட்டேல் விளையாடுகிறார்
    X

    மும்பை டெஸ்ட் போட்டியிலும் பார்த்தீவ் பட்டேல் விளையாடுகிறார்

    காயம் அடைந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கு மும்பை டெஸ்ட் போட்டியிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக பார்த்தீவ் பட்டேல் விளையாடுகிறார்.
    புதுடெல்லி:

    அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் 246 ரன்கள் வித்தியாசத்திலும், மொகாலியில் நடந்த 3-வது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போது இடது தொடைப்பகுதியில் காயம் அடைந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கு மொகாலி டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் மொகாலி டெஸ்டில் 42, 67 ரன்கள் வீதம் எடுத்து வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    ‘மும்பையில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் பார்த்தீவ் பட்டேல் இடம் பெறுவார்’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அஜய் ஷிர்கே தெரிவித்துள்ளார். விருத்திமான் சஹாவுக்கு ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணம் அடையாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு 4-வது டெஸ்ட் போட்டியிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும் என்ற நெருக்கடியில் இருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் மும்பையில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பயிற்சிக்கு பிறகு இங்கிலாந்து அணியின் புதுமுக வீரர் ஜென்னிங்ஸ் அளித்த பேட்டியில், ‘எங்கள் அணிக்கு நெருக்கடி இருப்பது உண்மை தான். அதேநேரத்தில் சரிவில் இருந்து மீண்டு இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×