search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: அரைஇறுதிக்கு முன்னேறியது கேரளா
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: அரைஇறுதிக்கு முன்னேறியது கேரளா

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கடைசி லீக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது.
    கொச்சி :

    8 அணிகள் இடையிலான 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் நேற்றிரவு கொச்சியில் அரங்கேறிய 56-வது மற்றும் கடைசி லீக்கில் கேரளா பிளாஸ்டர்சும், நார்த் ஈஸ்ட் யுனைடெட்டும் (கவுகாத்தி) மோதின.

    கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் கவுகாத்தி அணியினரும், டிரா செய்தாலே அரைஇறுதியை உறுதி செய்வதற்கு போதுமானது என்ற நிலையுடன் கேரளா வீரர்களும் 53 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் களம் புகுந்தனர்.

    தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிர கவனம் செலுத்தினர். ஆனாலும் முதல் பாதியில் கோல் வாய்ப்பு எதுவும் கனியவில்லை.

    பிற்பாதியில் கேரள வீரர்களின் கை முழுமையாக ஓங்கியது. 66-வது நிமிடத்தில் சக வீரர் முகமது ரபி தட்டிக்கொடுத்த பந்து கேரள நட்சத்திர வீரர் சி.கே.வினீத் வசம் சென்றது. அவர் இலக்கை நோக்கி அடிக்க தயாரான போது, கவுகாத்தியின் ரீகன் சிங் காலை குறுக்கே விட்டு தடுக்க முயன்றார். அதற்குள் 20.56 மீட்டர் தூரத்தில் இருந்து வினீத் உதைத்த ஷாட், எதிரணியின் கோல் கீப்பரை ஏமாற்றி வலைக்குள் நுழைந்தது. இதையடுத்து உள்ளூர் ரசிகர்கள் ஆனந்தத்தில் திளைத்தனர். பதில் கோல் திருப்ப கவுகாத்தி அணியினர் போராடினாலும், கேரளாவின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை.

    84-வது நிமிடத்தில் கேரளாவின் அன்டோனியா ஜெர்மன் இன்னொரு கோல் அடித்தார். ஆனால் கோல் பகுதியில் வைத்து கவுகாத்தியின் ரீகன் சிங்கை கையால் தோள்பட்டையோடு பிடித்து செயல்படவிடாமல் தடுத்ததால், இந்த கோலை நடுவர் நிராகரித்து விட்டார். இதனால் ரசிகர்கள் சிறிது ஏமாற்றம் அடைந்தாலும், ஆட்டத்தின் முடிவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

    விறுவிறுப்பான மோதலின் இறுதியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. சொந்த ஊரில் தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றி பெற்ற கேரளா அணி, பட்டியலில் 22 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தது.

    நேற்றுடன் லீக் சுற்று நிறைவு பெற்று விட்டன. முதல் 4 இடங்களை பிடித்த மும்பை சிட்டி, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், அட்லெடிகோ டீ கொல்கத்தா ஆகிய அணிகள் அரைஇறுதியை எட்டியுள்ளன. நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. உள்பட 4 அணிகள் வெளியேற்றப்பட்டன.

    அரைஇறுதி ஆட்டங்களில் மும்பை சிட்டி-கொல்கத்தா (டிச.10, 13), கேரளா-டெல்லி (டிச.11, 14) அணிகள் மோதுகின்றன. அரைஇறுதி சுற்று 2 ஆட்டங்களை கொண்டது. அதாவது இரு அணியும் தங்களுக்குள் அரைஇறுதியில் இரண்டு முறை மோதிய பிறகு, அதில் அதிக வெற்றி பெற்ற அணி அல்லது சமன் ஏற்பட்டால் அதிக கோல்கள் அடித்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி வருகிற 18-ந்தேதி கொச்சியில் நடைபெறுகிறது.
    Next Story
    ×