search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை - டெல்லி ஆட்டம் டிரா
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை - டெல்லி ஆட்டம் டிரா

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை சிட்டியும், டெல்லி டைனமோசும் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது
    மும்பை:

    3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடந்த 55-வது லீக்கில் ஏற்கனவே அரைஇறுதியை உறுதி செய்து விட்ட மும்பை சிட்டியும், டெல்லி டைனமோசும் சந்தித்தன. இதன் வெற்றி-தோல்வி யாரையும் பாதிக்காது என்ற நிலையில் அதற்கு ஏற்ப ஆட்டமும் மந்தமாகவே நகர்ந்தது. 22-வது நிமிடத்தில் தான் இலக்கை நோக்கி முதலாவது ஷாட்டே அடிக்கப்பட்டது. முதலிடத்தை தக்க வைக்கும் முனைப்புடன் மும்பை வீரர்கள் தடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தினர். அதே நேரத்தில் டெல்லி வீரர் புருனோ பெலிஸ்சரி அடித்த நல்ல ஷாட் கம்பத்தின் மேல் பகுதியில் பட்டு நழுவிப் போனது. முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை. பிற்பாதியிலும் கடைசி நிமிடம் வரை இதே நிலையே நீடித்ததால், ஆட்டம் கோல் இன்றி (0-0) டிரா ஆனது.

    இன்று இரவு 7 மணிக்கு கொச்சியில் அரங்கேறும் கடைசி லீக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) -கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. அரைஇறுதிக்குள் நுழையும் 4-வது அணி எது என்பதை தீர்மானிக்கும் ஆட்டமாக இது அமைந்திருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ‘டிரா’ செய்தாலே கேரளா அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்று விடலாம். அதே சமயம் அரைஇறுதியை எட்ட கவுகாத்தி அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

    உள்ளூரில் தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி கண்ட கேரளாவுக்கு சொந்த ஊரில் ஆடுவது சாதகமான அம்சமாகும். கேரளா பயிற்சியாளர் ஸ்டீவ் காபெல் கூறும் போது, ‘எங்களுக்கு டிராவுக்காக விளையாடத் தெரியாது. வழக்கம் போல் வெற்றிக்கான அணுகுமுறையுடன் விளையாடுவோம்’ என்றார். 
    Next Story
    ×