search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லோதா கமிட்டி விவகாரம்: டிசம்பர் 5 ஆம் தேதி வரை காத்திருக்க பிசிசிஐ பொதுக்குழு முடிவு
    X

    லோதா கமிட்டி விவகாரம்: டிசம்பர் 5 ஆம் தேதி வரை காத்திருக்க பிசிசிஐ பொதுக்குழு முடிவு

    லோதா கமிட்டி சிபாரிசு பிரச்சினை குறித்து டிசம்பர் 5 ஆம் தேதி வரை காத்திருக்க பிசிசிஐ பொதுக்குழு முடிவு செய்துள்ளது
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான கமிட்டி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது. அதனை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், இவற்றில்சில சிபாரிசுகளை ஏற்க மாநில கிரிக்கெட் சங்கங்கள் மறுப்பதால் தங்களால் அதனை அமல்படுத்த முடியவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    லோதா கமிட்டியின் சிபாரிசுகளை அமல்படுத்தாத வரை மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நிதி எதுவும் வழங்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

    இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டில் லோதா கமிட்டி நிலை அறிக்கை தாக்கல் செய்தது. அதில் ‘இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அப்சர்வராக முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளையை நியமிக்கவும், லோதா கமிட்டி சிபாரிசுக்கு எதிராக பதவியில் இருக்கும் நிர்வாகிகளை நீக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. லோதா கமிட்டி பிரச்சினை குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 5–ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது லோதா கமிட்டி தாக்கல் செய்து இருக்கும் நிலை அறிக்கை மீது நீதிபதிகள் உத்தரவு பிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் லோதா கமிட்டி சர்ச்சை குறித்து விவாதிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் டெல்லியில்  நடந்தது. இந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 5–ந் தேதி நடைபெறும் லோதா கமிட்டி வழக்கு விசாரணையில் என்ன உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்பது வரை காத்து இருப்பது என்றும் அதுவரை தற்போதைய நிலைப்பாட்டை தொடருவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
    Next Story
    ×