search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொகாலி டெஸ்ட்: 2-வது நாள் முடிவில் இந்தியா 271/6; முன்னிலைக்காக போராடும் அஸ்வின்- ஜடேஜா
    X

    மொகாலி டெஸ்ட்: 2-வது நாள் முடிவில் இந்தியா 271/6; முன்னிலைக்காக போராடும் அஸ்வின்- ஜடேஜா

    மொகாலி டெஸ்டில் 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்துள்ளது. முன்னிலைக்காக அஸ்வின் - ஜடேஜா ஜோடி போராடி வருகிறது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி மேலும் 15 ரன்கள் எடுத்து 283 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இந்திய அணியின் ஷமி 3 விக்கெட்டும் உமேஷ் யாதவ், ஜயந்த் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக முரளி விஜய், பார்தீவ் பட்டேல் ஆகியோர் களம் இறங்கினார்கள். முரளி விஜய் 12 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

    அடுத்து பட்டேல் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 42 ரன்கள் எடுத்த நிலையில் பட்டேல் ஆட்டம் இழந்தார்.

    அடுத்து புஜாராவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தது. 51 ரன்கள் எடுத்த நிலையில் புஜாரா ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த ரகானே (0), கருண் நாயர் (4) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்தியா 156 ரன்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது.

    அரைசதம் கடந்த விராட் கோலி 62 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 204 ரன்னாக இருந்தது. இதனால் இங்கிலாந்து எடுத்த ரன்னையாவது இந்தியா எடுக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.

    ஆனால் 7-வது வீரராக களம் இறங்கிய அஸ்வின் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ஜடேஜா முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அஸ்வின் அரை சதத்தால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.



    முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை விட குறைந்தது 50 ரன்னாவது முன்னிலை வகிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அஸ்வின் - ஜடேஜா ஜோடி விளையாடியது. இந்த ஜோடி 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. அஸ்வின் 57 ரன்னுடனும், ஜடேஜா 31 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி இதுவரை 7-வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது.

    2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்தை விட 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளைய 3-வது நாள் ஆட்டத்தில் இந்த ஜோடி இன்னும் 50 முதல் 60 ரன்கள் வரை நிலைத்து நின்று விளையாடினால் இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுக்க முடியும்.
    Next Story
    ×