search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி டிராபி ரன் மெஷின் ரிசாப் பந்த் வாய்ப்பை தடுத்தது என்ன?
    X

    ரஞ்சி டிராபி ரன் மெஷின் ரிசாப் பந்த் வாய்ப்பை தடுத்தது என்ன?

    ரஞ்சி டிராபியில் ரன்கள் குவித்து வரும் டெல்லியின் இளம் வீரர் ரிசாப் பந்த், சகாவிற்கு பதிலாக இந்திய அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பார்த்தீவ் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பந்தை தடுத்தது என்ன?.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு டெஸ்டுகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது.

    ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது விக்கெட் கீப்பர் சகாவிற்கு காயம் ஏற்பட்டது. இந்த காயத்துடன் மொகாலியில் 26-ந்தேதி தொடங்கும் போட்டியில் அவர் விளையாடினால் காயத்தின் தன்மை அதிகரிக்கும் என்பதால், மொகாலி டெஸ்டில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் ரஞ்சி போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் டெல்லி அணியின் இளம் வீரர் ரிசாப் பந்த், மத்திய பிரதேசத்தின் நமன் ஓஜா அல்லது தமிழ்நாட்டின் தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவரை சகாவிற்கு பதிலாக தேர்வு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு பார்த்தீவ் பட்டேலை தேர்வு செய்துள்ளது. பார்த்தீவ் பட்டேல் ரஞ்சி தொடரில் 49, 139 (நாட்அவுட்), 60, 21, 61, 53 மற்றும் 20 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், ரிசாப் பந்த் 117, 135, 60, 24, 9, 308, 146 ரன்கள் குவித்துள்ளார்.

    இதில் 67 பந்தில் 135 ரன்னும், 48 பந்தில் 100 ரன்களும் அடித்து ரஞ்சி தொடர் வரலாற்றில் குறைந்த பந்தில் செஞ்சூரி என சாதனைப் படைத்துள்ளார் ரிசாப் பந்த்.

    ரிசாப் பந்த் கேரளா அணிக்கெதிராக வயநாட்டில் விளையாடுகிறது. பந்தை தேர்வு செய்தால் அவர் வயநாட்டில் இருந்து திருவனந்தபுரம் அல்லது கொச்சிக்கு சாலை வழியாக வர வேண்டும். இங்கிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் பயணம் செய்ய வேண்டும். அதன்பின் டெல்லியில் இருந்து ஹரியானாவிற்குச் செல்ல வேண்டும்.

    வெள்ளிக்கிழமை மாலைக்குள் அவர் மொகாலி செல்வது கடினம் என்று கருதப்படுகிறது. இதனால்தான் பார்த்தீவ் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கருதப்படுகிறது.
    Next Story
    ×