search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் நாளை தொடக்கம்
    X

    ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் நாளை தொடக்கம்

    ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நாளை தொடங்குகிறது.
    பெர்த்:

    ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நாளை தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. காயத்தால் டிவில்லியர்ஸ் ஓய்வு எடுப்பதால் தென்ஆப்பிரிக்க அணியை பாப் டு பிளிஸ்சிஸ் வழிநடத்துகிறார். தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளம் என்று வர்ணிக்கப்படும் பெர்த்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    தென்ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் ஆட இருப்பது இது 11-வது முறையாகும். இதில் கடைசி இரு பயணங்களில் 2008-09-ம் ஆண்டில் 2-1 என்ற கணக்கிலும், 2012-ம் ஆண்டில் 1-0 என்ற கணக்கிலும் தென்ஆப்பிரிக்க அணி தொடரை வென்று அசத்தியது. அந்த வகையில் ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு குறி வைத்திருக்கும் தென்ஆப்பிரிக்க அணியில் ஸ்டெயின், ரபடா, மோர்னே மோர்கல், பிலாண்டர் ஆகிய வேக சூறாவளிகள் சாதிக்கும் உத்வேகத்துடன் வரிந்து கட்டி நிற்கிறார்கள்.

    அதே சமயம் இந்த முறை தென்ஆப்பிரிக்காவை புரட்டியெடுக்கும் வேட்கையில் ஆஸ்திரேலிய வீரர்கள் வியூகங்களை தீட்டியுள்ளனர். மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், பீட்டர் சிடில் ஆகியோர் அந்த அணியின் நம்பிக்கை பவுலர்களாக திகழ்கிறார்கள். 1.90 மீட்டர் உயரம் உடைய வேகப்பந்து வீச்சாளர் ஜோ மென்னி அறிமுக வீரராக களம் காண வாய்ப்புள்ளது. டேவிட் வார்னர், கேப்டன் ஸ்டீவன் சுமித், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ் ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்க்க ஆஸ்திரேலியா பலம் வாய்ந்த அணியாக மிரட்ட காத்திருக்கிறது.

    தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் கூறுகையில், ‘எங்களது முதல் இலக்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் தான். அவரைத் தான் அந்த அணி அதிகமாக சார்ந்து இருக்கிறது. கேப்டனை சீக்கிரம் வீழ்த்தி விட்டால் அதன் பிறகு அவர்களது பேட்டிங் வரிசை பாதிக்கப்படும். சில சமயம் ஒட்டுமொத்த அணியும் நிலைகுலைந்து விடும். இதற்கு முன்பு இந்த பாணியை வெற்றிகரமாக செய்து காட்டி இருக்கிறோம்.

    ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சென்று 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் தோற்றது. அதன் பிறகு எங்களுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 0-5 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இந்த தோல்விகள் அனேகமாக அவர்களை கொஞ்சம் காயப்படுத்தி இருக்கும்’ என்றார்.

    தற்போது ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் ஆஸ்திரேலியா 108 புள்ளிகளுடன் 3-வது இடமும், தென்ஆப்பிரிக்கா 96 புள்ளிகளுடன் 5-வது இடமும் வகிக்கின்றன. ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றால் 112 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறும். ஆனால் எந்த வகையிலும் இந்தியாவின் நம்பர் ஒன் (115 புள்ளி) இடத்துக்கு ஆபத்து இல்லை. தென்ஆப்பிரிக்கா 3-0 என்ற கணக்கில் தொடரை வசப்படுத்தினால் 105 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு உயரும். ஆஸ்திரேலியா 5-வது இடத்துக்கு சரியும். ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினால் 110 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் நீடிக்கும். பந்து வீச்சாளர் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின், முதலிடத்தில் உள்ள இந்தியாவின் அஸ்வினை பின்னுக்கு தள்ள வாய்ப்புள்ளது.

    மொத்தத்தில் பலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுகட்ட இருப்பதால் இந்த டெஸ்ட் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. பெர்த் மைதானத்தில் இதுவரை தோல்வியையே சந்திக்காத ஒரே அணி தென்ஆப்பிரிக்கா தான். அந்த அணி இங்கு 2 வெற்றியும், ஒரு டிராவும் கண்டுள்ளது. அந்த பெருமையை தக்க வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஷான் மார்ஷ், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மிட்செல் மார்ஷ், ஆடம் வோக்ஸ், பீட்டர் நெவில், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், பீட்டர் சிடில், ஜோ மென்னி அல்லது நாதன் லயன்.

    தென்ஆப்பிரிக்கா: ஸ்டீபன் குக் அல்லது டீன் எல்கர், குயின்டான் டி காக், அம்லா, டுமினி, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), ரோசவ், பவுமா, ஸ்டெயின், பிலாண்டர், ரபடா, கைல் அப்போட் அல்லது ஷம்சி.

    இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 
    Next Story
    ×