search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட்: 50 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து திணறல்
    X

    வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட்: 50 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து திணறல்

    மிர்புரில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 50 ரன்களுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது.
    வங்காள தேசம் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று மிர்புரில் தொடங்கியது.

    டாஸ் வென்ற வங்காள தேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் தமீம் இக்பால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 3-வது வீரராக களம் இறங்கிய மொமினுல் ஹக்யூ 66 ரன்கள் சேர்த்தார். இந்த இருவரையும் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 220 ரன்னில் சுருண்டது.

    இங்கிலாந்து அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி அதிகபட்சமாக 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக அலைஸ்டர் குக், டக்கெட் ஆகியோர் களம் இறங்கினார்கள். வங்காள தேச அணியினர் தொடக்கம் முதலே சுழற்பந்து வீச்சாளர் மூலம் தாக்குதல் நடத்தினார்கள். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. இங்கிலாந்து அணி 2-வது ஓவரின் கடைசி பந்தில் முதல் விக்கெட்டை இழந்தது. சாஹிப் அல் ஹசன் வீசிய பந்தில் டக்கெட் 7 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். 5-வது ஓவரை மெஹெதி ஹசன் மிராஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் குக் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த பேலன்ஸ் 9 ரன்னில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி 42 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

    4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இங்கிலாந்து அணி 12.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. அப்போது ஆட்டம் முடிவடைவதற்கு சில நிமிடங்களே இருந்ததால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

    ரூட் 15 ரன்னுடனும், மொயீன் அலி 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும், ஜோ ரூட்டை அவுட்டாக்கிவிட்டால் வங்காள தேசம் முதல் இன்னிங்சில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.
    Next Story
    ×