search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பிடிப்பேன்: 2 ஆபரேசன் செய்துள்ள நெஹ்ரா நம்பிக்கை
    X

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பிடிப்பேன்: 2 ஆபரேசன் செய்துள்ள நெஹ்ரா நம்பிக்கை

    இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம்பெறுவேன் என்று இரண்டு ஆபரேசன்கள் செய்து குணம் அடைந்துள்ள ஆசிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.
    இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா. இவர் 2000-ம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுமார் 6 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடரில் இடம்பிடித்திருந்தார். அதில் சிறப்பாக செயல்பட்டதால் வங்காள தேசத்தில் நடைபெற்ற ஆசிய டி20 கிரிக்கெட் தொடர், இந்தியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் இடம்பிடித்திருந்தார்.

    அதன்பின் ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். அப்போது சிறப்பாக பந்து வீசிய அவருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் இரண்டு முறை ஆபரேசன் செய்து கொண்டார். அதில் இருந்து குணமடைந்த அவர், அதன்பின் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு பயிற்சிக்காக சென்றிருந்தார். அப்போது திடீரென சிக்கன்குனியா காய்ச்சல் தாக்கியதால், பெங்களூரில் இருந்து சொந்த ஊரான டெல்லி திரும்பினார். செப்டம்பர் மாதம் முழுவதும் காய்ச்சல் தொடர்பாக அதிக வலியால் அவதிப்பட்டுள்ளார்.

    தற்போது காய்ச்சல் குணமடைந்து மீண்டுள்ளார். அத்துடன் இங்கிலாந்து அணிக்கெதிராக அடுத்த வருடம் தொடக்கத்தில் இந்தியா மோத இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம்பிடிப்பதுதான் முக்கிய இலக்கு என்றும் கூறியுள்ளார்.

    இதுகுறித்து நெஹ்ரா கூறுகையில் ‘‘இங்கிலாந்து அணிக்கெதிராக இந்தியா அடுத்த வருடம் முதலில் விளையாட இருக்கும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் இடம் பிடிக்கும் வகையில் ஜனவரி மாதத்திற்குள் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்பது என்னுடைய முதல் இலக்கு.

    நான் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் என்னுடைய பங்களிப்பு அணிக்கு வேண்டும் என்று நிர்வாகம் நினைத்தால் அதற்கும் நான் தயார்தான். அதன்பிறகு ஐ.பி.எல்.-2017ல் விளையாடுவதுதான் என்னுடைய பணி’’ என்றார்.
    Next Story
    ×