search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து
    X

    4-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து

    ராஞ்சியில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 19 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது.
    ராஞ்சி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 4-வது ஒருநாள் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பகல்-இரவு ஆட்டமாக இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன், பேட்டிங் தேர்வு செய்தார்.

    துவக்க வீரர்களாக களமிறங்கிய குப்தில், லாதம் ஆகியோர் நிதானமாக, அதேசமயம் அடிக்க வேண்டிய பந்தை மட்டும் அடித்து ஆடி ரன் சேர்த்தனர். இந்த ஜோடி 96 ரன்கள் சேர்த்த நிலையில், லாதம் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த குப்தில் 72 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

    விக்கெட் சரியாமல் நிதானமாக விளையாடிய வில்லியம்சன் 41 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் ராஸ் டெய்லரும் தன் பங்கினை சிறப்பாக செய்தார். ஆனால், அவர் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். பின்கள வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் சேர்த்தது.

    இதையடுத்து 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்கம் ஓரளவு நம்பிக்கை அளித்தபோதும், முன்னணி வீரர்கள் நிலைக்காததால் தடுமாறியது. துவக்க வீரர் ரோகித் சர்மா 11 ரன்களில் அவுட் ஆனார். ரகானே 57 ரன்களும், கோலி 45 ரன்களும் எடுத்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டோனி, 11 ரன்களில் வெளியேறினார்.

    அதன்பின்னர் இந்தியாவின் ரன் வேகம் மேலும் குறைந்து, விக்கெட்டும் அடுத்தடுத்து சரிந்தது. அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடிய அக்சர் பட்டேல் 40 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 38 ரன்கள் சேர்த்தார். குல்கர்னியும் அவருக்கு உதவியாக இருந்தார். எனினும், மற்ற வீரர்கள் சோபிக்காததால் இந்திய அணி 49-வது ஓவரில் 241 ரன்களில் சுருண்டது. குல்கர்னி ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரி ஒரு சிக்சர் உள்பட 25 ரன்கள் எடுத்தார்.

    இதனால், நியூசிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சவுத்தி 3 விக்கெட்டுகளும், போல்ட், நீஷம் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. எனவே, விசாகப்பட்டினத்தில் 29-ம் தேதி நடைபெறும் கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும்.
    Next Story
    ×