search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலியின் மனநிலை கம்ப்யூட்டர் போல் வேலை செய்கிறது: சுனில் கவாஸ்கர்
    X

    விராட் கோலியின் மனநிலை கம்ப்யூட்டர் போல் வேலை செய்கிறது: சுனில் கவாஸ்கர்

    இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனும், ஒருநாள் அணியின் துணை கேப்டனும் ஆன விராட் கோலியின் மனநிலை கம்ப்யூட்டர் போல் வேலை செய்கிறது என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரராக திகழ்பவர் விராட் கோலி. இவர் தன்னுடைய விடா முயற்சியின் காரணமாக தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார்.

    தற்போது இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியிலும், 3-வது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. இந்த இரண்டு போட்டியிலும் விராட் கோலியின் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது.

    ஞாயிற்றுக்கிழமை மொகாலியில் நடைபெற்ற போட்டியில் 154 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இதனால் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த சதம் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 26 சதங்கள் அடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 49 சதங்களுடன் முதல் இடத்திலும், ரிக்கி பாண்டிங் 30 சதங்களுடன் 2-வது இடத்திலும், சனத் ஜெயசூர்யா 28 சதங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். விராட் கோலி 4-வது இடத்தில் உள்ளார்.

    27 வயதாகும் விராட் கோலி முற்றிலும் கிரிக்கெட் ஷாட் மட்டுமே அடிக்கிறார். தற்போதைய நாகரீக கிரிக்கெட்டிற்கு ஏற்றாற்போல் ஏனோ தானோ என ஆடவில்லை, பேட்டை சுற்றவில்லை. இதனால் விராட் கோலியின் மனநிலை கம்ப்யூட்டர் போல் செயல்படுகிறது என்று கவாஸ்கர் புகழ்ந்துள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘விராட் கோலியின் பேட்டிங் மிகவும் அழகாக இருந்தது. எந்த வித பண்படாத ஷாட்டுகளும் அடிக்காமல், நேர்த்தியான கிரிக்கெட் ஷாட்டுக்கள் மூலம் ரன்கள் குவித்ததை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒன்றிரண்டு ஷாட்டுக்கள் தூக்கி அடித்திருக்கலாம், ஆனால், அவரது கடின முயற்சியை எந்தவொரு கிரிக்கெட் வல்லுனர்களும் குறை கூறமாட்டார்கள்.

    கோலியின் மனநிலை கம்ப்யூட்டர் போல் செயல்படுகிறது. பீல்டர் எங்கே நிற்கிறார்கள் என்பதை அது தெளிவாக கண்டுபிடிக்கிறது. அது ஆளில்லாத இடம்பார்த்து ரன்கள் அடிக்க உதவுகிறது.

    மைதானத்தில் அவருடைய செயல்பாடு சிறப்பான வகையில் உள்ளது. அது அவரை சிறந்த மனிதராக காட்டுகிறது. ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் பலரை சந்திக்கும் முறை மிகவும் அருமை. இளம் வீரர்களுக்கு அவர் ஒரு சிறந்த ரோல் மாடல்’’ என்றார்.
    Next Story
    ×