search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனியும், பேட்டிங் வரிசையும்
    X

    டோனியும், பேட்டிங் வரிசையும்

    இந்திய அணியின் ஒரு நாள் கேப்டனான டோனியின் பேட்டிங் வரிசை பற்றி பார்ப்போம்.
    இந்திய அணிக்கு 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை (ஒருநாள் போட்டி) வென்று கொடுத்து பெருமை சேர்த்தவர் டோனி.

    கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு இந்தியா கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு 2011-ம் ஆண்டு டோனி தலைமையில் உலக கோப்பை கிடைத்தது.

    இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் அவர் முன்னதாக களம் இறங்கி ஆட்டத்தின் போக்கை மாற்றி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். அந்த ஆட்டத்தில் 91 ரன் எடுத்த டோனி வெற்றிக்காக அடித்த சிக்சரை ரசிகர்கள் யாரும் இன்னும் மறக்க மாட்டார்கள்.

    தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரில் மொகாலியில் நடந்த 3-வது போட்டியில் அவர் முன்னதாக 4-வது வீரராக களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நெருக்கடியை குறைத்தார். ஆட்டத்தை நிறைவு செய்வதில் தான் தடுமாறுவதாகவும், இதனால் 4-வது வீரராக களம் இறங்கியதாகவும் மற்ற வீரர்கள் ஆட்டத்தை நிறைவு செய்யட்டும் என்றும் டோனி குறிப்பிட்டார்.

    35 வயதான அவரால் முன்புபோல் சேஸ் செய்வதில் வெற்றிகரமாக முடிக்க இயலவில்லை. இதன் காரணமாகவே 4-வது வீரர் வரிசையில் விளையாட தற்போது விரும்புகிறார். டோனி 4-வது வீரராக 24 ஆட்டத்தில் விளையாடி 1171 ரன் எடுத்துள்ளார். இதில் 5 போட்டியில் ஆட்டம் இழக்காததால் சராசரி 61.63 ஆகும்.

    அவர் 6-வது வீரர் வரிசையில் தான் அதிகமான ரன்களை குவித்துள்ளார். அந்த வரிசையில் 3613 ரன்களை (112 ஆட்டம்) எடுத்துள்ளார். சராசரி 45.16 ஆகும்.

    தற்போதுள்ள சூழ்நிலையில் 4-வது வீரர் வரிசை தான் தனக்கு பொருத்தமானது என்று அவர் கருதுகிறார். இதனால் இனிவரும் போட்டிகளில் 4-வது வரிசையிலேயே ஆடுவாரா? அல்லது ஆட்ட சூழ்நிலைக்கு தகுந்தவாறு பேட்டிங் வரிசையை மாற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
    Next Story
    ×