search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிங்க் பந்து போட்டியில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை: சதம் விளாசிய டி காக் சொல்கிறார்
    X

    பிங்க் பந்து போட்டியில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை: சதம் விளாசிய டி காக் சொல்கிறார்

    பிங்க் பந்து பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய தென்ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர், பகல் - இரவு பிங்க் பந்தில் எந்தவொரு வித்தியாசமும் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
    கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிக்கெதிராக பிங்க் பந்தில் பகல் - இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் கடந்த ஆண்டு நடைபெற்றது. அதன்பின் கடந்த வாரம் பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

    3-வது போட்டி ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையில் அடிலெய்டில் நடக்க இருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக தென்ஆப்பிரிக்கா அடிலெய்டில் இரண்டு நாட்கள் கொண்ட ஆட்டத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் மோதியது.

    இதில் தென்ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் டி காக் அதிரடியாக விளையாடி 103 பந்தில் 122 ரன்கள் குவித்தார். மேலும், ஹசிம் அம்லா (51), டுமினி (97) ஆகியோரும் ரன்கள் சேர்த்தனர்.

    பிங்க் பந்தில் விளையாடியது குறித்து டி காக் கூறுகையில் ‘‘பிங்க் பந்து போட்டியில் எந்தவொரு வித்தியாசத்தையும் என்னால் காண முடியவில்லை. பந்து பந்தாகத்தான் இருக்கிறது. எனது வழியில் நான் வழக்கமாக விளையாடினேன். இந்த சூழ்நிலையில் நான் இப்படித்தான் விளையாட வேண்டும். எனக்கு எந்தவொரு வித்தியாசமும் தெரியவில்லை.

    நான் சதம் அடித்தாலோ அல்லது டக்அவுட் ஆனாலோ அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில் இது ஒரு பயிற்சி ஆட்டம். வலைப்பயிற்சி போன்றதுதான். சர்வதேச போட்டியிலும் விளையாடும்போது, அதில் சரியான வகையில் கவனம் செலுத்தி என்னால் என்ன முடியுமோ, அதை செய்ய விரும்புவேன்.

    போட்டி தொடங்கும்போது சற்று கடினமாக இருந்தது. ஆனால் ஒயிட் பந்து, சிகப்பு பந்து என எந்த கிரிக்கெட்டாக இருந்தாலும் அதன் ஒரு சிறிய பகுதிதான் இது என்று எண்ணினேன். பவுண்டரி அருகே உள்ள அவுட்பீல்டு மிகவும் மெதுவாக இருந்தது. இதனால் பவுண்டரி அடிக்க கடினமாக இருந்தது. சூரியன் மறைந்துகொண்டிருந்த மாலை நேரத்தில் மிகவும் அருமையாக இருந்தது’’ என்றார்.
    Next Story
    ×