search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரபரப்பான சூழ்நிலையில் சிட்டகாங் டெஸ்ட்: இங்கிலாந்து வீழ்த்தி வங்காள தேசம் சாதனைப் படைக்குமா?
    X

    பரபரப்பான சூழ்நிலையில் சிட்டகாங் டெஸ்ட்: இங்கிலாந்து வீழ்த்தி வங்காள தேசம் சாதனைப் படைக்குமா?

    சிட்டகாங்கில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் வங்காள தேசம் அணியின் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 2 விக்கெட்டுக்கள் உள்ளன. இதனால் ஆட்டம் பரபரப்பான சூழ்நிலையை அடைந்துள்ளது.
    வங்காள தேசம் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சிட்டகாங்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 293 ரன்கள் குவித்தது. வங்காள தேசத்தின் 18 வயதான அறிமுக சுழற்பந்து வீச்சாளர் மெஹெதி ஹசன் 6 வி்க்கெட்டுக்கள் வீழ்த்தி முத்திரை படைத்தார்.

    பின்னர் வங்காள தேசம் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் தமீம் இக்பால் (78), விக்கெட் கீப்பரும், கேப்டனுமான முஷ்பிகுர் ரஹிம் (48), மெஹ்முதுல்லா (38) ஆகியோரின் ஆட்டத்தால் அந்த அந்த அணி முதல் இன்னிங்சில் 248 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. அந்த அணி கடைசி 6 விக்கெட்டுக்களை 28 ரன்னிற்குள் இழந்தது குறிப்பிடத்தக்கது. பென் ஸ்டோக்ஸ் 14 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    வங்காள தேசம் 248 ரன்னில் ஆல் அவுட் ஆனதால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 45 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 45 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 62 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

    6-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டது. அணயின் ஸ்கோர் 189 ரன்னாக இருக்கும்போது 47 ரன்கள் எடுத்த நிலையில் பேர்ஸ்டோவ் இஸ்லாம் ரஃபி பந்தில் ஆட்டம் இழந்தார். 6-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 127 ரன்கள் குவித்தது. பேர்ஸ்டோவ் அவுட்டான சிறிது நேரத்தில் 85 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் அவுட்டானார்.

    நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்திருந்தது. கிறிஸ் வோக்ஸ் 11 ரன்னுடனும், ஸ்டூவர்ட் பிராட் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய பிராட் நேற்றைய 10 ரன்னுடனும் ரன்அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த வந்த கரேத் பேட்டி 3 ரன்னில் அவுட்டாக இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 240 ரன்களில் ஆல்அவுட் ஆனது. வோக்ஸ் 19 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். வங்காள தேச அணி சார்பில் சாஹிப் அல் ஹசன் அதிகபட்சமாக 5 வி்க்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    முதல் இன்னிங்சில் 45 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் ஒட்டுமொத்தமாக வங்காள தேசத்தை விட இங்கிலாந்த அணி 285 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.

    இதனால் வங்காள தேசம் அணியின் வெற்றிக்கு 286 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சுமார் 170 ஓவர்களில் 286 ரன்கள் இலக்கு என்பதால் நம்பிக்கையுடன் வங்காள தேசம் 2-வது இன்னிங்சில் களம் இறங்கியது.

    தொடக்க வீரர்களாக தமீம் இக்பால், இம்ருல் கெய்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். தமீம் இக்பால் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆனால், இம்ருல் கெய்ஸ் 43 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த மொமினுல் ஹக்யூ (27), மெஹ்முதுல்லா (17), சாஹிப் அல் ஹசன் (24) ஓரளவிற்கு நம்பிக்கையூட்டும் ரன்களை சேர்த்தனர்.

    ஒரு கட்டத்தில் வங்காள தேசம் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. கைவசம் 5 விக்கெட்டுக்கள் உள்ள நிலையில் 146 ரன்கள் மட்டும்தான் தேவை என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    6-வது விக்கெட்டுக்கு கேப்டனும் விக்கெட் கீப்பருமான முஷ்பிகுர் ரஹிம் உடன் சபீர் ரஹ்மான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தன்னம்பிக்கையுடன் விளையாடியது. இதனால் வங்காள தேச அணியின் ஸ்கோர் 200-ஐத் தாண்டியது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

    வங்காள தேச அணியின் ஸ்கோர் 227 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. இதனால் இங்கிலாந்து பெருமூச்சு விட்டது. முஷ்பிகுர் ரஹிம் 39 ரன்கள் எடுத்த நிலையில் பேட்டி பந்தில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தது.

    முறுமுனையி்ல் விளையாடிய சபீர் ரஹ்மான் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். கைவசம் 4 விக்கெட்டுக்கள் உள்ள நிலையில் 59 ரன்கள் தேவைப்பட்டது.

    அடுத்த வந்த மெஹெதி ஹசன் (1), கம்ருல் இஸ்லாம் ரஃபி (0) என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் வங்காளதேசத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது. வங்காள தேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து இரண்டு விக்கெட்டுக்களை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று இங்கிலாந்து நினைத்தது. ஆனால் 9-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய தைஜுல் இஸ்லாம் சபீர் ரஹ்மான் உடன் ஒட்டிக்கொண்டார். இதனால் 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை இருவரும் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    4-வது நாள் ஆட்ட முடிவில் வங்காள தேசம் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்துள்ளது. சபீர் ரஹ்மான் 59 ரன்னுடனும், தைஜூல் இஸ்லாம் 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    வங்காள தேச அணி கைவசம் 2 விக்கெட்டுக்கள் உள்ளன. வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்படுகிறது. இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சரிசம அளவில் உள்ளது. நாளை ஆட்டத்தில் வங்காள தேசத்திற்கு 90 ஓவர்கள் உள்ளது. இதனல் நிலைத்து நின்றாலே 33 ரன்கள் எட்டி விடலாம்.

    ஆனால் இங்கிலாந்து வீரர்கள் உடனடியாக வங்காள தேசத்தின் விக்கெட்டுக்களை வீழ்த்தி முயற்சி செய்வார்கள். அதேவேளையில் ரன்கள் விட்டுக்கொடுக்க முடியாத சூழ்நிலையும் அந்த அணிக்கு உள்ளது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் காலை ஒரு மணி நேரத்திற்குள் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரிந்து விடும்.
    Next Story
    ×