search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொகாலி ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 286 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து
    X

    மொகாலி ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 286 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து

    மொகாலியில் நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 286 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி இந்த தொடரில் 7-வது முறையாக ‘டாஸ்’ தோற்றது.

    இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. டேவிச்சுக்கு பதிலாக நீசம் சேர்க்கப்பட்டார்.

    தொடக்க வீரர்களாக கப்தில், லாதம் ஆகியோர் களம் இறங்கினார்கள். கப்தில் அதிரடியாக விளையாடினார். ஆனால் 7-வது ஓவரில் எல்.பி.டபிள்யூ மூலம் உமேஷ் யாதவ் அவரை வெளியேற்றினார். கப்தில் 21 பந்தில் தலா இரண்டு பவுண்டரி, சிக்சருடன் 27 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து லாதம் உடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். கடந்த 2-வது போட்டியில் சிறந்த பங்களிப்பை கொடுத்த இந்த ஜோடி இன்றைய ஆட்டத்தில் 34 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வில்லியம்சன் 27 பந்தில் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

    3-வது விக்கெட்டுக்கு லாதம் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் லாதம் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 59 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இந்த ரன்னைத் தொட்டார். இருவருடைய ஆட்டத்தால் நியூசிலாந்து அணி வலுவான ஸ்கோரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

    28.2 ஓவரில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது. 29-வது ஓவரை மிஸ்ரா வீசினார. இந்த ஓவரின்  3-வது பந்தில் டெய்லர் ஸ்டம்பிங் முறையில் ஆட்டம் இழந்தார். அவர் 57 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். அதன்பின் நியூசிலாந்தின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது.

    30-வது ஓவரின் 4-வது பந்தில் ஆண்டர்சன் 6 ரன்னிலும், 31-வது ஓவரின் 2-வது பந்தில் ரோஞ்சி 1 ரன்னிலும், 32-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் லாதம் 61 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 17 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது. அடுத்து வந்த சான்ட்னெர் 7 ரன்னிலும், சவுத்தி 23 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    9-வது விக்கெட்டுக்கு நீசம் உடன் ஹென்றி ஜோடி சேர்ந்தார். அப்போது நியூசிலாந்து அணி 37.5 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து தத்தளித்து கொண்டிருந்தது.

    9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நீசம் - ஹென்றி இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக நீசம் அதிரடியாக விளையாடினார். 44 பந்தில் 6 பவுண்டரியுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் அரை சதத்தை பதிவு செய்த நீசம் 49-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 47 பந்தில் 7 பவுண்டரியுடன் 57 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 67 பந்தில் 84 ரன்கள் குவித்தது.

    கடைசி விக்கெட்டாக களம் இறங்கிய போல்ட் கடைசி ஓவரின் 4-வது பந்தில் க்ளீன் போல்டாக நியூசிலாந்து அணி 48.4 ஓவரில் 285 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 286 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ள நியூசிலாந்து. ஹென்றி 37 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 39 ரன்கள் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் கேதர் ஜாதவ் 5 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 10 ஓவர்களில் 75 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பும்ப்ரா, மிஸ்ரா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தனார்கள்.

    286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×