search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியில் இடம் பெற்றது மகிழ்ச்சி: தமிழக கபடி வீரர் சேரலாதன் பேட்டி
    X

    இந்திய அணியில் இடம் பெற்றது மகிழ்ச்சி: தமிழக கபடி வீரர் சேரலாதன் பேட்டி

    உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என தமிழக கபடி வீரர் தர்மராஜ் சேரலாதன் கூறியுள்ளார்.
    சென்னை:

    உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா- ஈரான் அணிகள் மோதின. இதில் இந்தியா 38-20 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.

    உலக கோப்பை கபடியில் இந்தியா தொடர்ந்து 3-வது முறையாக ‘ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டம் பெற்றது. 3 முறையும் ஈரானையே தோற்கடித்து இருந்தது. இதற்கு முன்பு 2004 மற்றும் 2007-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற உலக கோப்பையை வென்று இருந்தது.

    முதல் பாதியில் இந்தியா 13-18 என்ற புள்ளிக் கணக்கில் பின்தங்கி இருந்தது. 2-வது பாதியில் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு உலக கோப்பையை கைப்பற்றினர். இந்திய அணியில் அஜய் தாக்கூர் அதிகபட்சமாக 12 புள்ளியும், நிதின் தோமர் 6 புள்ளியும் எடுத்தனர்.

    இதுவரை நடந்த 3 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் கபடியில் இந்தியா அசைக்க முடியாத நாடு என்பது நிருபணமாகி உள்ளது.

    1990-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடி அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து 2014-ம் ஆண்டு வரை நடைபெற்ற ஆசிய விளையாட்டுகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதாவது தொடர்ச்சியாக 7 முறை தங்கப்பதக்கம் (1990, 1994, 1998, 2002, 2006, 2010, 2014) வென்றது.

    உலக கோப்பை, ஆசிய விளையாட்டுகளில் இந்திய கபடி அணியாரும் அசைக்க முடியாத அளவுக்கு மிகவும் வலுவாக இருக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் கபடி இடம் பெறும் பட்சத்தில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் உறுதியாகிவிடும்.

    உலககோப்பையை வென்ற இந்திய கபடி அணியில் தமிழகத்தில் இருந்து ஒரே ஒரு வீரரான தர்மராஜ் சேரலாதன் இடம் பெற்று இருந்தார். 42 வயதான அவர் தஞ்சை மாவட்டம் திருச்சிணம் பூண்டியை சேர்ந்தவர் ஆவார். உலககோப்பையை வென்றது குறித்து சேரலாதன் கூறியதாவது:-

    சிறு வயதில் இருந்தே எனக்கு கபடி மீது அதிக ஆர்வம் இருந்தது. தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி 1997-ல் ரெயில்வே துறையில் சேர்ந்தேன். தேசிய அணியில் விளையாடிய நான் அதன்பிறகு இந்திய அணிக்காக ஆடினேன்.

    1999-ம் ஆண்டு காத்மண்டுவில் நடந்த (நேபாளம்) தெற்காசிய விளையாட்டு போட்டியிலும், 2010-ம் ஆண்டு டாக்காவில் (வங்காளதேசம்) நடந்த தெற்காசிய போட்டியிலும் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தேன்.

    இதேபோல 2010-ம் ஆண்டு ஒமனில் நடந்த ஆசிய ‘பீச்’ விளையாட்டில் எனது தலைமையிலான அணி தங்கம் வென்றது.

    தற்போது உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய கபடி அணியில் மேலும் தமிழக வீரர்கள் இடம் பெற வேண்டும்.

    கபடி விளையாட்டில் வேலை வாய்ப்பு குறைந்ததால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆர்வம் இல்லாமல் இருந்தனர். புரோ கபடி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு அதிக மானவர்கள் கபடிக்கு வருகிறார்கள். இதனால் அடுத்த உலககோப்பை கபடி போட்டியில் தமிழக வீரர்கள் அதிக அளவில் இடம் பிடிப்பார்கள்.

    நான் புரோ கபடியில் முதல் 2 சீசனில் பெங்களூர் அணிக்கு ஆடினேன். அதன்பிறகு தெலுங்கு அணியிலும், பாட்னா அணியிலும் விளையாடினேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×