search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகள் உற்சாகமாக செல்பி எடுத்துக்கொண்ட காட்சி.
    X
    போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகள் உற்சாகமாக செல்பி எடுத்துக்கொண்ட காட்சி.

    முன்னணி 8 வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்

    முன்னணி 8 வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்குகிறது.
    சிங்கப்பூர்:

    ஆண்டின் இறுதியில் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று என்று அழைக்கப்படும் சர்வதேச பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதன்படி மொத்தம் ரூ.46 கோடி பரிசுத்தொகைக்கான 46-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடக்கிறது. காயம் காரணமாக 2-ம் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விலகி விட்டார். மாஸ்கோவில் நடந்த கிரம்ளின் கோப்பையை வென்றதன் மூலம் ரஷியாவின் ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா கடைசி வீராங்கனையாக இந்த போட்டிக்கு நேற்று தகுதி பெற்றார்.

    இதில் ஒற்றையர் பிரிவில் களம் காணும் வீராங்கனைகள் ‘ரெட்’, ‘ஒயிட்’ என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ரெட்’ பிரிவில் நம்பர் ஒன் நட்சத்திரம் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), சிமோனா ஹாலெப் (ருமேனியா), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), டொமினிகா சிபுல்கோவா (சுலோவக்கியா) ஆகியோரும், ‘ஒயிட்’ பிரிவில் நடப்பு சாம்பியன் அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா (ரஷியா) ஆகியோரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.

    ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ரவுண்ட்-ராபின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள். கிராண்ட்ஸ்லாமுக்கு நிகராக கருதப்படும் இந்த போட்டியில் முதல் நாளில் ஹாலெப்- மேடிசன் கீஸ், கெர்பர்- சிபுல்கோவா மோதுகிறார்கள்.

    இதே போல் இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடிகள் கலந்து கொள்கிறது. நடப்பு சாம்பியனும், இரட்டையர் தரவரிசையில் முதலிடம் வகிப்பவருமான இந்திய வீராங்கனை சானியா மிர்சா மீண்டும் மார்ட்டினா ஹிங்கிசுடன் (சுவிட்சர்லாந்து) கைகோர்த்து இந்த போட்டியில் அடியெடுத்து வைக்கிறார்.

    Next Story
    ×