search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
    X

    3-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது.
    மொகாலி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும், டெல்லியில் நடந்த 2-வது ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடைபெறுகிறது.

    கடந்த ஆட்டத்தில் வெற்றியின் விளிம்புக்கு வந்து 6 ரன் வித்தியாசத்தில் ஏற்பட்ட தோல்வி இந்திய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. கேப்டன் டோனி கொஞ்சம் அதிரடியாக ஆடி இருந்தால் முடிவு மாறியிருக்கும். விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும் டோனி ‘ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் கில்லாடி’ என்பதை நிரூபிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார். மனிஷ்பாண்டே, ரோகித் சர்மா ஆகியோரும் ஜொலிக்க வேண்டியது அவசியமாகும். அதே சமயம் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ் ஆகியோரின் செயல்பாடு ஓரளவு திருப்திகரமாக இருக்கிறது. கை வலியால் அவதிப்பட்ட ரோகித் சர்மா நேற்று பயிற்சியில் ஈடுபட்டதன் மூலம் அவர் களம் காணுவதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது.

    எப்படியோ, முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து, மீண்டும் தொடரில் இந்திய அணி முன்னிலை பெற எல்லா வகையிலும் வரிந்து கட்டி நிற்கும் என்று உறுதியாக நம்பலாம். வைரஸ் காய்ச்சலால் முதல் இரு ஆட்டத்திலும் விளையாடாத இந்திய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, இன்னும் முழு உடல்தகுதியை எட்டாததால் அணியினருடன் செல்லவில்லை. இதனால் இன்றைய ஆட்டத்திலும் அவர் கிடையாது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    டெல்லி ஆட்டத்தின் மூலம் நடப்பு தொடரில் முதலாவது வெற்றியை ருசித்த நியூசிலாந்து அணியின் நம்பிக்கை நிச்சயம் அதிகரித்து இருக்கும். கேப்டன் வில்லியம்சனின் சதமும், டிரென்ட் பவுல்ட்டின் துல்லியமான பந்து வீச்சும் அந்த அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் 13 ஆண்டுகளுக்கு பிறகு தோற்கடித்த நியூசிலாந்து அணி, அதே உத்வேகத்தை தொடருவதில் தீவிரமாக இருப்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    மொகாலி மைதானத்தில் இதுவரை 22 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 13 ஆட்டத்தில் விளையாடி அதில் 8-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டுள்ளது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா, ரஹானே, விராட் கோலி, மனிஷ் பாண்டே, டோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ் அல்லது தவால் குல்கர்னி, ஜஸ்பிரித் பும்ரா.

    நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டாம் லாதம், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், கோரி ஆண்டர்சன், லுக் ரோஞ்ச், மிட்செல் சான்ட்னெர், ஆன்டன் டேவ்சிச் அல்லது ஜேம்ஸ் நீஷம், மேட் ஹென்றி, டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட்.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    Next Story
    ×