search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை கபடி: இந்தியா ‘ஹாட்ரிக்’ பட்டம் வெல்லுமா? ஈரானுடன் இன்று பலப்பரீட்சை
    X

    உலக கோப்பை கபடி: இந்தியா ‘ஹாட்ரிக்’ பட்டம் வெல்லுமா? ஈரானுடன் இன்று பலப்பரீட்சை

    இந்தியா-ஈரான் இரு அணிகளும் தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

    ஆமதாபாத்:

    3-வது உலககோப்பை கபடிப்போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

    இதன் அரைஇறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தது. ஒரு அரை இறுதியில் ஈரான்-தென்கொரியா அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஈரான் 28-22 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    2-வது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா- தாய்லாந்து அணிகள் மோதின. இந்திய வீரர்களின் அபாரமான ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் தாய்லாந்து வீரர்கள் திணறினார்கள்.

    இதில் இந்தியா 73-20 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. தாய்லாந்துடனான இந்த ஆட்டம் இந்தியாவுக்கு இறுதிப்போட்டிக்கான பயிற்சி ஆட்டம் போல் அமைந்தது. 53 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்த வெற்றி கிடைத்தது.

    இறுதிப்போட்டி இன்று இரவு 7.45 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா-ஈரான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

    இந்திய அணி 2004 மற்றும் 2007ம் ஆண்டு ஈரானை வீழ்த்தி கோப்பையை வென்றது. தற்போது 3-வது முறையாக ஈரானை தோற்கடித்து ‘ஹாட்ரிக்’ கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

    இந்திய அணி ‘லீக்’ ஆட்டங்களில் தென் கொரியாவிடம் மட்டும் தோற்றது. ஆஸ்திரேலியா, வங்காளதேசம், அர்ஜென் டினா, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி இருந்தது. அரை இறுதியில் தாய்லாந்தை வீழ்த்தியது. இதனால் இந்தியா தொடர்ந்து 3-வது முறையாக உலககோப்பை வெல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் ஈரான் அணியும் திறமை வாய்ந்தது. அந்த அணி ‘லீக்’ ஆட்டத்தில் போலந்திடம் மட்டும் அதிர்ச்சிகரமாக தோற்றது. 2 முறையும் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து முதல்முறையாக உலககோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    Next Story
    ×