search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2017 பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறும்: நஜம் சேதி
    X

    2017 பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டி பாகிஸ்தானில் நடைபெறும்: நஜம் சேதி

    2017-ம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டி பாகிஸ்தான் லாகூர் மைதானத்தில் நடைபெறும் என பி.எஸ்.எல். சேர்மன் நஜம் சேதி கூறியுள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் (பி.எஸ்.எல்.) நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரை பாகிஸ்தான் மண்ணில் நடத்த அந்த வாரியம் முயற்சி செய்தது.

    ஆனால், இலங்கை அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாடும்போது தீவிரவாதிகள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். இதனால் வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆகையால் முதல் சீசனை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் போட்டியை நடத்தியது.

    ஆனால் அடுத்த வருடத்திற்கான தொடரின் இறுதிப் போட்டியை லாகூர் மைதானத்தில் நடத்துவதில் பாகிஸ்தான் பிடிவாதமாக இருந்தது. ஆகையால், இந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்றது. அப்போது தாங்கள் பங்கேற்கும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றால் லாகூரில் வந்து விளையாட வேண்டும் என்று வெளிநாட்டு வீரர்களிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியுள்ளது.

    இதனால் பாகிஸ்தானில் 2017 பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக்குழுவின் தலைவரும், பி.எஸ்.எல். சேர்மனும் ஆன நஜம் சேதி கூறுகையில் ‘‘ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் 2-வது பி.எஸ்.எல். தொடர் வெற்றிகரமாக முடியும். அதன் இறுதிப் போட்டி லாகூரில் நடைபெற இருக்கிறது.

    எங்களால் என்ன செய்ய முடியும் என்பது வெளிநாட்டு வீரர்களுக்குத் தெரியும். பெரும்பாலான வீரர்கள் பாகிஸ்தான் வந்து விளையாட தயாராக இருக்கிறார்கள். தாங்கள் பங்கேற்கும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றால், லாகூரில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்ற நிபந்தனையுடன வீரர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.

    வீரர்கள் வந்து செல்லும் வரை அவர்களுக்கான முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். லாகூரில் இறுதிப் போட்டியை நடத்த நாங்கள் உறுதியாக உள்ளோம்’’ என்றார்.

    லாகூரில் போட்டியை நடத்துவற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தரும்படி பஞ்சாப் மாகாண அரசிடம் பிசிபி கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு பஞ்சாப் மாகாண அரசு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
    Next Story
    ×