search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து 293 ரன்னில் ஆல்அவுட்
    X

    வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து 293 ரன்னில் ஆல்அவுட்

    சிட்டகாங்கில் நடைபெற்று வரும் வங்காள தேச அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 293 ரன்கள் எடுத்து அல்அவுட் ஆனது.
    இங்கிலாந்து - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சிட்டகாங்கில் நேற்று நடைபெற்று. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி மொயீன் அலி (68), பேர்ஸ்டோவ் (52) ஆகியோரின் அரைசதத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. வோக்ஸ் 36 ரன்னுடனும், ரஷித் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் வோக்ஸ் நேற்று எடுத்திருந்த 36 ரன்களிலேயே ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை தைஜூல் இஸ்லாம் வீழ்த்தினார். ரஷித் 26 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். கடைசி விக்கெட்டாக பிராட் 13 ரன்னில் ஆட்டம் இழக்க இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 293 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    வங்காள தேச அணியின் புதுமுக சுழற்பந்து வீச்சாளர் மெஹெதி ஹசன் மிராஸ் 39.5 ஓவர்கள் வீசி 80 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முத்திரை பதித்தார்.

    பின்னர் வங்காள தேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக தமீம் இக்பால், இம்ருல் கயீஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். கயீஸ் 21 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மொமினுல் ஹக்யூ ரன்ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த மெஹ்முதுல்லா 38 ரன்கள் எடுத்து ரஷித் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் தொடக்க வீரர் தமீம் இக்பால் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து முன்னேறிய அவர் 78 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால், வங்காள தேசம் 58 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. முஷ்பிகுர் ரஹிம் 27 ரன்னுடனும், சாகிப் அல் ஹசன் 7 ரன்னுடனும் விளையாடி வருகிறார்கள்.
    Next Story
    ×