search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது ஒருநாள் கிரிக்கெட்: வில்லியம்சன் சதத்தால் இந்தியாவிற்கு 243 ரன்கள் வெற்றி இலக்கு
    X

    2-வது ஒருநாள் கிரிக்கெட்: வில்லியம்சன் சதத்தால் இந்தியாவிற்கு 243 ரன்கள் வெற்றி இலக்கு

    2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கேன் வில்லியம்சன் சதத்தால் இந்தியாவிற்கு 243 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று பகல்- இரவு போட்டியாக நடக்கிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி, பந்துவீச முடிவு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது.

    இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் விளையாடிய வீரர்கள் களமிறங்கினர். நியூசிலாந்து அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. போல்ட், ஹென்றி, தேவ்சிச் சேர்க்கப்பட்டுள்ளனர். பிரேஸ்வெல், நீஷம் மற்றும் சோதி ஆகியோருக்கு வாய்ப்பு இல்லை.

    நியூசிலாந்து அணியின் லாதம், கப்தில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை உமேஷ் யாவத் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் கப்தில் ரன்ஏதும் எடுக்காமல் உமேஷ் யாதவ் பந்தில் டக்அவுட் ஆனார்.

    அடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். இவர் லாதம் உடன் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்தது. 20.3 ஓவரில் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 120 ரன்னாக இருக்கும்போது லாதம் 46 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    அடுத்து வந்த டெய்லர் (21), ஆண்டர்சன் (21) சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஆனால், கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 109 பந்தில் 13 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 128 பந்தில் 14 பவுண்டரி, 1 சிக்சருடன் 118 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அப்போது நியூசிலாந்து 42.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின் இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீச அந்த அணியில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் மட்டுமே எடுத்தது. சான்ட்னெர் 9 ரன்னுடனும், போல்ட் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 243 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. இந்திய அணி சார்பில் மிஸ்ரா மற்றும் பும்ப்ரா தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    Next Story
    ×