search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாய்லாந்து-ஜப்பான் அணிகள் மோதிய ஆட்டத்தின் விறுவிறுப்பான காட்சி.
    X
    தாய்லாந்து-ஜப்பான் அணிகள் மோதிய ஆட்டத்தின் விறுவிறுப்பான காட்சி.

    உலக கோப்பை கபடி: இந்தியா-தாய்லாந்து அரையிறுதியில் நாளை மோதல்

    உலக கோப்பை கபடி போட்டியில் இந்தியா-தாய்லாந்து அணிகள் நாளை அரையிறுதியில் மோதுகிறது.
    ஆமதாபாத்:

    3-வது உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 12 நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது.

    ‘ஏ’ பிரிவில் இருந்து தென்கொரியா முதல் இடத்தையும் (25 புள்ளி), இந்தியா (21 புள்ளி) 2-வது இடத்தையும் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன. வங்காளதேசம் 3-வது இடத்தையும் (16 புள்ளி), இங்கிலாந்து 4-வது இடத்தையும் (10 புள்ளி), ஆஸ்திரேலியா 5-வது இடத்தையும் (5 புள்ளி),அர்ஜென்டினா (புள்ளி எதுவும் இல்லை) கடைசி இடத்தையும் பிடித்து வெளியேறின.

    ‘பி’ பிரிவில் நேற்று நடந்த கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தாய்லாந்து- ஜப்பான் அணிகள் மோதின. இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தாய்லாந்து 37-33 என்ற புள்ளிக்கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

    இந்த பிரிவில் தாய்லாந்து, ஈரான் அணிகள் 4 வெற்றி, 1 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று சமநிலை பெற்றன. ஆட்டத்தின் புள்ளிக் கணக்கில் தாய்லாந்து முதல் இடத்தையும், ஈரான் 2-வது இடத்தையும் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின. கென்யா (16 புள்ளி) 3-வது இடத்தையும், ஜப்பான் (12 புள்ளி) 4-வது இடத்தையும், போலந்து (11 புள்ளி) 5-வது இடத்தையும், அமெரிக்கா (புள்ளி எதுவுமில்லை) கடைசி இடத்தையும் பிடித்து வெளியேறின.

    இன்று ஓய்வு நாளாகும். நாளை (வெள்ளிக்கிழமை) அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் அரைஇறுதியில் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த தென்கொரியா- ‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஈரான் அணிகள் மோதுகின்றன.

    தென்கொரியா ‘லீக்’ ஆட்டம் அனைத்திலும் (5 போட்டி) வென்று இருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. ஈரான் அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் இருக்கிறது.

    இரவு 9 மணிக்கு நடை பெறும் 2-வது அரை இறுதியில் ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த இந்தியா- ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த தாய்லாந்து அணிகள் மோதின.

    2 முறை சாம்பியனான இந்தியா ‘லீக்’ ஆட்டத்தில் தென்கொரியாவிடம் மட்டும் அதிர்ச்சிகரமாக தோற்று இருந்தது. மற்ற 4 அணிகளையும் வென்று இருந்தது. தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது.

    தாய்லாந்து அணியும் எல்லா வகையிலும் அதிர்ச்சி கொடுக்க கூடிய அணியாகும். சமபலத்துடன் அணிகள் மோதுவதால் அரை இறுதி போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×