search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்
    X

    2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது. இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணியின் ‘வீறுநடை’ தொடருமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
    புதுடெல்லி :

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.

    தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை 190 ரன்களில் சுருட்டி அந்த இலக்கை 33.1 ஓவர்களில் எட்டிய இந்திய அணி மீண்டும் ஒரு முறை ஆதிக்கம் செலுத்துவதற்கு முழுவீச்சில் ஆயத்தமாக உள்ளது. அறிமுக வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் அபார பந்து வீச்சும் (3 விக்கெட்), விராட் கோலியின் வியப்புக்குரிய பேட்டிங்கும் (85 ரன்கள்) முதல் ஆட்டத்தில் வெகுவாக கவர்ந்தது. சொந்த மண்ணில் விளையாடுவது நமக்கு சாதகமான அம்சம் என்றாலும் இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும் என்பதால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். அதாவது பனியால் ஈரப்பதம் ஆகி விட்டால் அதன் பிறகு பந்தை துல்லியமாக பிடித்து வீசுவது சிரமம். எனவே ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்வதற்கே முன்னுரிமை அளிக்கும்.

    டெஸ்ட் தொடரில் கேப்டனாக விராட் கோலியின் அசத்தல் தொடருவதால், ஒரு நாள் தொடரில் எதிரணியை முழுமையாக சாய்க்க வேண்டிய கட்டாயம் இந்திய கேப்டன் டோனிக்கு இருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் 21 ரன்களில் ரன்-அவுட் ஆன டோனி, தனது பேட்டிங்கிலும் முத்திரை பதிக்க வேண்டியது அவசியமாகும். அவர் இன்னும் 61 ரன்கள் எடுத்தால், ஒரு நாள் போட்டியில் 9 ஆயிரம் ரன்களை தொடும் 5-வது இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்துவார். அதே சமயம் சொந்த ஊரில் களம் காணும் விராட் கோலி இங்கும் ஜொலிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

    வெற்றி கூட்டணியை உடைக்க டோனி விரும்பமாட்டார் என்பதால் இந்திய அணியில் மாற்றம் ஏதும் இருக்காது என்று உறுதியாக நம்பலாம்.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, நடப்பு இந்திய பயணத்தில் இன்னும் ஒரு வெற்றியை கூட பெறவில்லை. டாஸ் அதிர்ஷ்டமும் அந்த அணிக்கு இல்லை. அந்த அணியில் திறமைசாலிகளுக்கு பஞ்சம் இல்லை என்றாலும் அவர்கள் இந்தியர்களின் வியூகத்தை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். முந்தைய ஆட்டத்தில் அவசர கதியில் ஷாட்டுகளை அடித்து விக்கெட்டுகளை கொத்துகொத்தாக இழந்த நியூசிலாந்து அணியினர் இன்றைய ஆட்டத்தில் தவறுகளை திருத்திக்கொண்டு பரிகாரம் தேட முயற்சிப்பார்கள்.

    நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘கனே வில்லியம்சன் தரம் வாய்ந்த வீரர். உலக தரவரிசையில் முன்னணியில் இருப்பதே அதற்கு சான்று. கடினமான காலக்கட்டத்தில் கேப்டன் பதவியை ஏற்று இருக்கிறார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒட்டுமொத்த அணியும் தற்போது அனுபவத்தை கற்று வருகிறது. ஆனால் பிரன்டன் மெக்கல்லம் நியூசிலாந்து அணியை வழிநடத்தி, சாதித்தது போன்று மற்றவர்களால் செய்வது கடினமானது.

    அதிரடியில் எந்த அளவுக்கு மிரட்டுவார் என்பதை அனைவரும் அறிவோம். ஆனாலும் எங்கள் அணியில் நிறைய திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பொறுப்பை உணர்ந்து, முழு திறமையை வெளிக்காட்ட வேண்டியது முக்கியம். ஒரு பேட்டிங் குழுவாக அதிக ரன்கள் எடுப்பதை எதிர்நோக்கி உள்ளோம். கணிசமான ரன்களை குவித்து விட்டால் இந்தியாவுக்கு நெருக்கடி உருவாகி விடும். யாருடைய செயல்பாட்டையும் குறிப்பிட்டு சொல்லப்போவதில்லை. ஆனால் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்கில் அனைவரும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். இன்னும் அதிக ஆற்றலை செலவிட வேண்டும்’ என்றார்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரஹானே, ரோகித் சர்மா, விராட் கோலி, மனிஷ் பாண்டே, டோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ், பும்ரா.

    நியூசிலாந்து: டாம் லாதம், மார்ட்டின் கப்தில், கனே வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், கோரி ஆண்டர்சன், லுக் ரோஞ்ச், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, பிரேஸ்வெல் அல்லது டிரென்ட் பவுல்ட், சோதி அல்லது மேட் ஹென்ரி.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1,3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    Next Story
    ×