search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து கேப்டன் அலஸ்டர் கூக் புதிய சாதனை
    X

    இங்கிலாந்து கேப்டன் அலஸ்டர் கூக் புதிய சாதனை

    நாளைய போட்டி கூக்கின் 134-வது டெஸ்ட் ஆகும். இதன் மூலம் அதிக டெஸ்டில் விளையாடிய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை கேப்டன் கூக் பெறுகிறார்.

    சிட்டகாங்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இங்கிலாந்து- வங்காளதேசம் இடையேயான 2 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் போட்டி சிட்டகாங்கில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    இந்த டெஸ்டில் விளையாடுவதன் மூலம் இங்கிலாந்து கேப்டன் அலஸ்டர் கூக் புதிய சாதனை படைக்கிறார். நாளைய போட்டி அவருக்கு 134-வது டெஸ்ட் ஆகும். இதன் மூலம் அதிக டெஸ்டில் விளையாடிய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.

    அலெக் ஸ்டூவர்ட் 1990- 2003-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 133 டெஸ்டில் விளையாடி இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. இதை கூக் கடந்த ஆகஸ்ட் மாதம் சமன் செய்தார்.

    31 வயதான கூக் 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் நாக்பூரில் நடந்த டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகம் ஆனார். அவர் 133 டெஸ்டில் விளையாடி 10,599 ரன் (239 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். சராசரி 47.3) ஆகும். 29 சதமும், 51 அரைசதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 294 ரன் குவித்துள்ளார்.

    கூக்குக்கு சமீபத்தில் தான் 2-வது குழந்தை பிறந்தது. குடும்பத்தினருடன் இருந்து விட்டு வங்காளதேசம் வந்து டெஸ்ட் அணியில் இணைந்து கொண்டார்.

    Next Story
    ×