search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலியின் செல்லப்பெயர் சிக்கூ: சுயசரிதை புத்தகத்தில் ருசிகர தகவல்கள்
    X

    விராட் கோலியின் செல்லப்பெயர் சிக்கூ: சுயசரிதை புத்தகத்தில் ருசிகர தகவல்கள்

    இந்திய கிரிக்கெட் ‘புயல்’ விராட் கோலிக்கு ‘சிக்கூ’ என்ற வேடிக்கையான செல்லப் பெயர் இருப்பது தெரிய வந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் ‘புயல்’ விராட் கோலிக்கு ‘சிக்கூ’ என்ற வேடிக்கையான செல்லப் பெயர் இருப்பது தெரிய வந்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் வீரர் 27 வயதான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நிறைய சாதனைகளை படைத்துக்கொண்டே இருக்கிறார். சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய கேப்டன் என்ற மகத்தான சிறப்பை பெற்றார். ரன் குவிக்கும் எந்திரமாக உருவெடுத்துள்ள விராட் கோலியின் செல்லப்பெயர் என்ன தெரியுமா? ‘சிக்கூ’. தமிழில் சொல்ல வேண்டும் என்றால் சப்போட்டா பழம். எப்படி இந்த பெயர் வந்தது தெரியுமா?

    கோலியின் வாழ்க்கை பயணம் அடங்கிய ‘டிரைவன்: தி விராட் கோலி ஸ்டோரி’ என்ற சுயசரிதை புத்தகம் ஒன்று அண்மையில் வெளியானது. அதில் டெல்லி கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்ட அஜித் சவுத்ரி கூறியுள்ள சுவாரஸ்மான தகவல் வருமாறு:-

    அப்போது டெல்லி அணி ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக மும்பைக்கு சென்றிருந்தது. அச்சமயம் விராட் கோலி 10 முதல்தர ஆட்டங்களில் கூட ஆடவில்லை. என்றாலும் ஒரு வீரராக அவரும் அணியில் அங்கம் வகித்தார். டெல்லி அணியில் ஷேவாக், கவுதம் கம்பீர், ரஜத் பாட்டியா, மிதுன் மன்ஹாஸ் ஆகிய பிரபல வீரர்களை பார்த்ததும் அவருக்கு உற்சாகம் தாங்கல. இது போன்ற பெரிய வீரர்களுடன் ஓய்வறையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததால் கோலி மிகவும் மகிழ்ச்சியில் காணப்பட்டார்.

    ஒரு நாள் மாலை, சலூன் கடைக்கு சென்று தனது சிகை அலங்காரத்தை வித்தியாசமாக மாற்றிக்கொண்டு தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்தார். சில இளம் வீரர்களை நோக்கி வேகமாக ஓடி வந்த விராட் கோலி தனது புதிய தோற்றம் எப்படி இருக்கிறது என்று ஆர்வமுடன் கேட்டார். அருகில் நின்ற நான் அவரிடம், ‘ஒன்றும் மோசமாக இல்லை. ஆனால் தலையை பார்க்க ‘சிக்கூ’ (சப்போட்டா) மாதிரி இருக்கிறது’ என்று தமாஷ் செய்தேன். ஆனால் கடைசியில் அதுவே அவரது செல்லப்பெயராக ஒட்டிக்கொண்டது. இதை கோலி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    அப்போது அவரது ஒரே இலக்கும், முயற்சியும், அணியில் தனது இடத்தை நிலைநிறுத்துவதில் மட்டுமே இருந்தது. சவால் அளிக்கக்கூடிய ஒரு மிக திறமையான இளைஞர் என்பதை நான் அறியவில்லை. அதே சமயம் இன்னும் அதிக ரன்கள் குவிக்க வேண்டும், அனைவரது கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதில் அவரது கவனம் இருந்தது.

    இவ்வாறு அஜித் சவுத்ரி அதில் கூறியுள்ளார்.

    விராட் கோலியின் முன்னேற்றத்தில் அவரது ஆரம்ப கால பயிற்சியாளரும், ஆலோசகருமான ராஜ்குமார் ஷர்மாவின் பங்கு அளப்பரியது. இதை கோலி எப்போதும் பெருமையாக கூறுவார். கோலி, தனது ஆசான் மீது எந்த அளவுக்கு அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறார் என்பதற்கு சிறு சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம். 2014-ம் ஆண்டு ஆசிரியர் தினத்தன்று காலையில், ராஜ்குமார் ஷர்மாவின் வீட்டிற்கு கோலியின் சகோதரர் விகாஸ் சென்றார். வீட்டை அடைந்ததும் செல்போனை டயல் செய்து ராஜ்குமாரிடம் கொடுத்தார். எதிர்முனையில் பேசிய விராட் கோலி, ‘ஆசிரியர் தின வாழ்த்துகள்’ என்று கூறிய போது ராஜ்குமாரின் கையில் விகாஸ் சாவிகொத்தை ஒன்று வைத்து அழுத்தினார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டின் வெளியே வந்து பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். அங்கு அழகான கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. ஆசிரியர் தின பரிசாக தனது ஆலோசகருக்கு கோலி வழங்கும் பரிசு என்று விகாஸ் கூறிய போது, ராஜ்குமார் நெகிழ்ந்து போய் விட்டார்.

    விராட் கோலியின் சுயசரிதை புத்தகத்தில் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ள ராஜ்குமார், ‘இதை சும்மா பரிசாக மட்டும் பார்க்கவில்லை. என்னுடன் இணைந்து பணியாற்றிய போது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தார், தனது வாழ்க்கையில் பயிற்சியாளரின் பங்களிப்பு எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை அவர் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தியதாகவே இதை கருதுகிறேன்’ என்றார். 
    Next Story
    ×