search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நரசிங் யாதவ் ஊக்கமருந்து விவகாரம்: சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது
    X

    நரசிங் யாதவ் ஊக்கமருந்து விவகாரம்: சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது

    நரசிங் யாதவ் ஊக்கமருந்து உட்கொண்ட வழக்கை சி.பி.ஐ. தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
    இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரராக திகழ்பவர் நரசிங் யாதவ். இவர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கு தகுதிப் பெற்றார். இதே பிரிவில் இரண்டு முறை இந்தியாவிற்கு ஒலிம்பிக் பதக்கம் வாங்கிக் கொடுத்த சுஷில் குமார் காயம் காரணமாக தகுதி பெற முடியவில்லை.

    இதனால் தனக்கும் நரசிங் யாதவுக்கும் இடையில் இந்தியாவில் தகுதிச்சுற்று போட்டி வைத்து, அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ? அவர்களை ரியோவிற்கு அனுப்ப வேண்டும் என்று சுஷில் குமார் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கை விளையாட்டுத்துறை அளவில் தோற்றுப்போனதால் பிரதமர் மற்றும் கோர்ட்டை அணுகினார். இதிலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் சுஷில் குமாருக்கும், நரசிங் யாதவிற்கும் இடையே மோதல் இருந்ததாக கூறப்பட்டது.

    இந்நிலையில் நரசிங் யாதவின் மாதிரி பரிசோதனைக்குட்பட்டது. அப்போது ஜூன் 25-ந்தேதியும், ஜூலை 5-ந்தேதியும் வெளிவந்த முடிவில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தெரியவந்தது. இந்த முடிவு பெரிய சர்ச்சையை எழுப்பியது.

    ‘நான் ஊக்கமருந்து எடுத்துக் கொள்ளவில்லை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஹாஸ்டலில் நான் சாப்பிட்ட உணவு அல்லது குடிக்கும் பொருட்களில் ஊக்கமருந்தை கலந்து விட்டனர். இது எனக்கு எதிராக நடந்த சதி’ என்று தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சியிடம் (NADA) முறையிட்டார். நாடாவும் தீவிர விசாரணைக்குப் பின் நரசிங் யாதவ், அவருக்குத் தெரியாமல்தான் ஊக்கமருந்தை பயன்படுத்தியுள்ளார். இதனால் ரியோவில கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்தது.

    ஆகையால் நரசிங் யாதவ் ரியோ சென்று போட்டிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். ஆனால், போட்டியில் கலந்து கொள்வதற்கு முந்தைய நாள் உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (WADA) நாடாவின் முடிவை எதிர்த்து விளையாட்டுத்துறை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இதில் நாடாவின் முடிவை தள்ளுபடி செய்து அவருக்கு நான்கு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது.

    எந்த தவறும் செய்யாத எனக்கு நான்கு ஆண்டு தடையா?. நான் தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள். எனக்கு ஊக்கமருந்து கலந்தது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று நரசிங் யாதவ் கூறினார்.

    இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என இந்திய மல்யுத்த பெடரேஷன் தலைவர் ப்ரிஜ் பூஷண் ஷரண் கடந்த ஆகஸ்ட் 28-ந்தேதி பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். அதனடிப்படையில் பிரதமர் அலுவலகம் சி.பி.ஐ.-க்கு பரிந்துரை செய்தது.

    இந்நிலையில் நரசிங் யாதவ் வழக்கை இன்று சி.பி.ஐ. தனது கையில் எடுத்துள்ளது. முதற்கட்டமாக நரசிங் விவகாரம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
    Next Story
    ×