search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உள்பட எந்த தொடர்பும் வைக்கக் கூடாது: காம்பீர் சொல்கிறார்
    X

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உள்பட எந்த தொடர்பும் வைக்கக் கூடாது: காம்பீர் சொல்கிறார்

    பாகிஸ்தான் உடன் கிரிக்கெட் உள்பட எந்தவொரு தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று இந்திய அணியின் தொடக்க வீரரான கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
    இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கோட்டருகே போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் தீவிரவாதிகளும் பாகிஸ்தான் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இதனால் இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ளது. சமீபத்தில் 19 ராணுவ வீரர்களை பலி வாங்கிய உரி தாக்குதலுக்குப் பிறகு இந்த விரிசல் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் - இந்தியாவிற்கு இடையில் கிரிக்கெட் தொடர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் அனுராக் தாக்கூர் கூறினார். அத்துடன் ஐ.சி.சி. நடத்தும் பொதுவான தொடர்களிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மோதாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஐ.சி.சி.யிடம் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

    பெரும்பாலானோர் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உள்பட எந்தவொரு தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றே கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர் கவுதம் காம்பீரும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து காம்பீர் கூறுகையில் ‘‘எல்லையில் தீவிரவாத தாக்குதல் சம்பவம் முடிவுக்கு வரும்வரை பாகிஸ்தானுடன் எந்தவொரு தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதை நான் உண்மையிலேயே ஒப்புக் கொள்கிறேன். ஏனென்றால், நம் நாட்டிற்காக ஏராளமானோர் தங்களது பிள்ளைகளை இழந்துள்ளனர். சிலர் தந்தை, மகன் அல்லது கணவன்களை இழந்துள்ளனர். அவர்கள் இடத்தில் இருந்து மக்கள் யோசிக்க வேண்டும்.

    உண்மையிலேயே என்னால் ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு என்ன வேண்டுமென்றாலும் சொல்ல முடியும். நாம் விளையாடக்கூடாது அல்லது என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று கூறலாம். கிரிக்கெட்டை அரசியலுடன் ஒப்பிடக் கூடாது, பாலிவுட் சினிமாத்துறையை அரசியலுடன் ஒப்பிடக்கூடாது என்றும் சொல்லலாம். ஆனால், உயிருக்கு உயிராக நேசித்தவர்களை இழந்து வருந்தும் மக்களை கேட்டால் அதற்கான பதில் கிடைக்கும்.

    எனவே, இந்தியர்களுக்கு, சொந்த நாட்டின் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத காலம்வரை மற்ற எல்லாவற்றையும் புறம் தள்ளிவிடலாம் என்பதை நான் முற்றிலுமாக ஏற்றுக்கொள்கிறேன். எல்லையில் தீவிரவாத பிரச்சினை முடியும்வரை பாகிஸ்தான் உடன் எந்தவொரு தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’’ என்றார்.
    Next Story
    ×