search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸி. அணியின் புற்றுநோயாக இருந்த குழுவில் வாட்சனும் ஒருவர்: கிளார்க் பேட்டி
    X

    ஆஸி. அணியின் புற்றுநோயாக இருந்த குழுவில் வாட்சனும் ஒருவர்: கிளார்க் பேட்டி

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் புற்றுநோய் போன்று இருந்த குழுவில் வாட்சன் அங்கம்வகித்ததாக முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
    ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. அந்த அணிக்கு கேப்டனாக திகழ்ந்த கிளார்க் அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் டெஸ்ட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

    தற்போது இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை சுயசரிதையாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டையொட்டி ஆஸ்திரேலியாவின் ‘சேனல் 9’ தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது, தனது பழைய பகையை வெளிப்படுத்தும் வகையில் பேசிய அவர், ஆஸ்திரேலியா அணியில் புற்றுநோய் போன்று இருந்த குழுவில் வாட்சன் அங்கம்வகித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவி்ல் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதலிரண்டு டெஸ்டில் மோசமான தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி, அடுத்த இரண்டு டெஸ்டில் எழுச்சி பெற என்ன செய்ய வேண்டும் என்பதை நேரிலோ அல்லது இ-மெயில் மூலமாகவோ தெரிவிக்குமாறு வீரர்களிடம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

    இதற்காக 5 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால் வாட்சன், பேட்டின்சன், மிட்செல் ஜான்சன், கவாஜா ஆகிய நான்கு வீரர்கள் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இந்த தொடரை ஆஸ்திரேலியா 0-4 என இழந்து ஒயிட்வாஷ் ஆனது. இதனால் பயிற்சியாளராக இருந்த மிக்கே ஆர்தர் நீக்கப்பட்டார். அப்போது ‘ஆல்-ரவுண்டர் வாட்சன் ஆஸ்திரேலியா அணியின் புற்றுநோய்’ என்று கிளார்க் குறிப்பிட்டதாக ஆர்தர் கூறினார்.

    இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கிளார்க் ‘‘மிக்கே ஆர்தர் கூறியதுபோல் வாட்சனை புற்றுநோய் என்று நான் கூறவில்லை. ஆனால், அணியில் புற்றுநோய் போன்று இருந்த இருந்த வீரர்கள் அல்லது குழுவின் ஒரு அங்கமாக வாட்சன் இருந்தார். அதை நாம் சரிசெய்யாவிடில் அது புற்றுநோயாக மாறியிருக்கும் என்று கூறினேன்’’ என்றார்.

    மொகாலியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் வாட்சன் உள்பட நான்கு வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். பயிற்சியின்போது சரியாக செயல்படாததால் அவர்கள் நீக்கப்பட்டதாக கிளார்க் மற்றம் ஆர்தர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×