search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா டெஸ்ட்: புவனேஸ்வர் குமார் வேகத்தில் நியூசி. தடுமாற்றம்; 2-வது நாள் முடிவில் 128/7
    X

    கொல்கத்தா டெஸ்ட்: புவனேஸ்வர் குமார் வேகத்தில் நியூசி. தடுமாற்றம்; 2-வது நாள் முடிவில் 128/7

    கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் புவனேஸ்வர் குமாரின் அபார பந்து வீச்சால் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
    கொல்கத்தா:

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்சை தடுமாற்றத்துடன் ஆரம்பித்து சற்று ஆறுதலுடன் நிறைவு செய்தது.

    புஜாரா (87), ரகானே (77), சகா (54 நாட் அவுட்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி இரண்டாவது நாளான இன்று 316 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4-வது விக்கெட்டை இழந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. இதனால் தேநீர் இடைவேளை விடப்பட்டது. தேநீர் இடைவேளை முடிந்தும் மழை நிற்காததால் போட்டி தொடங்குவது தாமதமானது.

    பின்னர் மழை நின்றது. அதன்பின் மைதான ஊழியர்கள் உடனடியாக மைதானத்தில் தேங்கிய நீரை வெளியேற்றினார்கள். இதனால் 4 மணியளவில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், மொகமது சமி ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள்.

    ராஸ் டெய்லர் 36 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்தில் முதல் ஸ்லிப் திசையில் நின்ற விஜயிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வாட்லிங் களம் இறங்கினார். சான்ட்னெர் 11 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அடுத்து ஹென்றியை முதல் பந்திலேயே க்ளீன் போல்டாக்கி வந்த வேகத்தில் பெவிலியனுக்கு அனுப்பினார்.

    ஹென்றி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 7-வது விக்கெட்டுக்கு வாட்லிங் உடன் ஜிதன் பட்டேல் ஜோடி சேர்ந்தார். நியூசிலாந்து அணி 34 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது நாள் ஆட்டம் முடிவடைந்ததாக நடுவர்கள் தெரிவித்தனர்.

    வாட்லிங் 11 ரன்னுடனும், பட்டேல் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது நியூசிலாந்து 188 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 3 விக்கெட்டுக்கள் மட்டுமே உள்ளன. அவர்களில் வாட்லிங் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்யும் திறமையுள்ளவர். என்றாலும் இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொண்டு அவரால் அதிக ரன்கள் குவிக்க இயலாது.

    நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் இன்னும் 88 ரன்கள் எடுத்தாலும் இந்தியா 100 ரன்கள் முன்னிலை வகிக்கும். 2-வது இன்னிங்சில் 250 ரன்களுக்கு மேல் எடுத்தால் இந்தியா கொல்கத்தா டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிப்பதோடு ஐ.சி.சி. தரவரிசையில் முதல் இடத்தைப் பிடிக்கும்.
    Next Story
    ×