search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய மண்ணில் ரன் குவிக்க திணறுகிறாரா கோலி?
    X

    இந்திய மண்ணில் ரன் குவிக்க திணறுகிறாரா கோலி?

    இந்திய மண்ணில் விராட் கோலி ரன் குவிக்க திணறி வருகிறார். இந்தியாவில் தொடர்ந்து 11 டெஸ்டுகள் நடைபெற இருப்பதால் அவரது பேட்டிங்கை வளர்த்துக் கொள்வது அவசியம்.
    இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. மூன்று வகை கிரிக்கெட்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர், இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்பட்டு வருகிறார்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி இந்திய மண்ணில் ரன் குவிக்க திணறி வருகிறார். இவர் டெஸ்ட் அணியின் கேப்டனாக பதவி ஏற்ற பிறகு இந்தியா, தென் ஆப்பிரிக்காவுடன் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 3-0 என தொடரைக் கைப்பற்றியது.

    ஆனால், விராட் கோலி மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 1 மற்றும் 29 ரன்கள் எடுத்தார். நாக்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 22 மற்றும் 16 ரன்கள் எடுத்தார். (நாக்பூர் ஆடுகளம் முதல் நாளில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது. இதனால் எந்த வீரரும் அரைசதம் அடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

    பெங்களூரில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் மழையினால் டிரா ஆனது. இதில் இந்தியா இரண்டு இன்னிங்சிலும் பேட்டிங் செய்யவில்லை. டெல்லியில் நடைபெற்ற 4-வது மற்றும் கடைசி டெஸ்டில் 44 மற்றும் 88 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 6 இன்னிங்சில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார்.

    தற்போது நியூசிலாந்திற்கு எதிரான தொடர் நடைபெற்று வருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 9 மற்றும் 18 ரன்கள் எடுத்தார். தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் 9 ரன்னில் ஆட்டம் இழந்துள்ளார்.

    9 இன்னிங்சில் 236 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். சராசரி 26.2 ஆகும். முக்கியமான இடமாக கருதப்படும் 4-வது இடத்தில் களம் இறங்கும் கோலி ரன் குவிக்க திணறுவது இந்திய அணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இருந்தாலும் தன்னுடைய கேப்டன் பதவியை திறமையாக கையாண்டு வருகிறார். இந்தியா தொடர்ந்து இந்திய மண்ணில் 11 டெஸ்டில் விளையாட இருக்கிறது. இதனால் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    Next Story
    ×