search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லோதா கமிட்டி பரிந்துரை விவகாரம்: கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு திடீர் தள்ளிவைப்பு
    X

    லோதா கமிட்டி பரிந்துரை விவகாரம்: கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு திடீர் தள்ளிவைப்பு

    லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இன்று நடைபெற இருந்த இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் குறித்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து பரிந்துரை செய்ய முன்னாள் நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் கமிட்டி அமைத்தது.

    லோதா கமிட்டி பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்திய பிறகு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு சிபாரிசுகளை சுப்ரீம் கோர்ட்டில் சமர்பித்தது. இந்த பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அதனை அமல்படுத்த உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரத்தை கவனிக்கும் பொறுப்பையும் லோதா கமிட்டிக்கு அளித்தது. அத்துடன் பரிந்துரைகளை அமல்படுத்த இரண்டு கட்ட காலக்கெடுவும் விதித்தது.

    லோதா கமிட்டி சிபாரிசுகளில் சில தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறும் இந்திய கிரிக்கெட் வாரியம் லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்துவதை காலம் தாழ்த்தியது. அத்துடன் லோதா கமிட்டியின் கூட்டத்தையும் புறக்கணித்தது.

    இதற்கிடையில் லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்தும் விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடு என்ன? என்பது குறித்து அறிக்கை தயாரித்த லோதா கமிட்டி, அதனை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்த லோதா கமிட்டி அறிக்கைக்கு அக்டோபர் 6-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெறுவதாக இருந்தது. இதில் லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், சிறப்பு பொதுக்குழு கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. சில கிரிக்கெட் வாரிய உறுப்பினர் உரிய அங்கீகார கடிதம் கொண்டு வராத காரணத்தால் பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×