search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து நாளை தொடக்கம்
    X

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து நாளை தொடக்கம்

    8 அணிகள் பங்கேற்கும் 3-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி நாளை தொடங்கி டிசம்பர் 18-ந்தேதி வரை நடக்கிறது
    கவுகாத்தி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    கடந்த ஆண்டு நடந்த 2-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த அணி இறுதிப் போட்டியில் கோவாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. சென்னையின் எப்.சி. அணி வீரர் மென்டோஜா (கொலம்பியா) 13 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்தவர்களில் முதலிடத்தை பிடித்தார்.

    3-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி நாளை தொடங்கி டிசம்பர் 18-ந்தேதி வரை நடக்கிறது. இதில் சென்னையின் எப்.சி. அட்லெடிகோ டி கொல்கத்தா, டெல்லி டைனாமோஸ், கோவா, கேரளா பிளஸ்டர்ஸ், மும்பை சிட்டி, புனே சிட்டி, நார்த்ஈஸ்ட் யுனைடெட் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் போட்டிகள் நடக்கும்.

    அரையிறுதியில் மோதும் அணிகள் இரண்டு போட்டியில் விளையாடும். இதில் அதிக கோல் வித்தியாசம் பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    கவுகாத்தியில் நாளை நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் - கேரளா பிளஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி 2-ந்தேதி கொல்கத்தாவை சந்திக்கிறது. சென்னை அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொள்ளுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த அணியில் இருந்த நட்சத்திர வீரர்களான எலனோ, மென்டோஜா ஆகியோர் இந்த சீசனில் விலகி உள்ளார். இருந்த போதிலும் திறமையான வெளிநாட்டு மற்றும் உள்ளூர் வீரர்கள் உள்ளனர். மேலும் தலைமை பயிற்சியாளர் மார்கோ மெட்டராசி (இத்தாலி) இருப்பது சென்னைக்கு கூடுதல் பலமாகும். இதேபோல் மற்ற அணிகளும் பலமானதாகவே இருக்கின்றன.

    கோப்பையை வென்ற அணிகளே மீண்டும் வெல்லுமா அல்லது புதிய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
    Next Story
    ×