search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா- நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்
    X

    2-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா- நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது.
    கொல்கத்தா :

    கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கான்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இந்த போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும். தசைப்பிடிப்பால் வெளியேறிய தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுலுக்கு பதிலாக கவுதம் கம்பீர் அல்லது ஷிகர் தவான் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படுவர். இரண்டு ஆண்டுக்கு மேலாக கம்பீர் டெஸ்ட் போட்டியில் விளையாடாததால் தவானுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது.

    மேலும் 5 பவுலர்களுடன் களம் காணும் யுக்தி குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது. அவ்வாறு நடந்தால் ரஹானே அல்லது ரோகித் சர்மா ஆகியோரில் ஒருவரின் இடம் கேள்விக்குறியாகி விடும்.

    மற்றபடி கோலி தலைமையிலான இந்திய படையினர் வழக்கமான முழு உத்வேகத்துடன் ஆயத்தமாக உள்ளனர். இந்த டெஸ்டிலும் இந்திய அணி வாகை சூடினால் தொடரை கைப்பற்றுவதுடன், ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிவிட்டு மீண்டும் முதலிடத்தை பிடித்து விடும். அந்த வகையில் இந்தியாவுக்கு இந்த டெஸ்ட் முக்கியமானதாக அமைந்துள்ளது. சொந்த மண்ணில் கடந்த 12 டெஸ்டுகளில் தோல்வி பக்கமே செல்லாத இந்திய அணி அந்த பெருமையை தக்க வைப்பதிலும் தீவிரமாக உள்ளது.

    ஆடுகளத்தில் கொஞ்சம் புற்கள் காணப்படுகின்றன. தொடக்கத்தில் பேட்டிங்குக்கு உகந்ததாகவும், போக போக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது ‘ஆடுகளத்தை பார்க்க நன்றாக உள்ளது. பொதுவாக கொல்கத்தா ஆடுகளம் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கக்கூடியது. இந்த முறையும் அப்படி தான் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என இந்திய கேப்டன் விராட் கோலி குறிப்பிட்டார்.

    கான்பூர் டெஸ்டில் அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் எதிரணியின் 16 விக்கெட்டுகளை கபளகரம் செய்து மிரட்டினர். இந்த டெஸ்டிலும் அவர்களது சுழலைத் தான் நமது அணி மலைபோல் நம்பி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

    தொடரை தோல்வியுடன் சந்தித்து இருக்கும் நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீள முயற்சிக்கும். முதலாவது டெஸ்டில் அந்த அணியின் பேட்டிங் குறிப்பிடும்படி இல்லை. தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில், பார்மில் இல்லாவிட்டாலும் சில வீரர்களின் காயத்தால் அவருக்கு வாய்ப்பு அளிப்பதை தவிர வேறு வழியில்லை.

    உடல்நிலை குறைவால் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் நேற்று பயிற்சிக்கு வரவில்லை. ஓட்டலிலேயே தங்கி இருந்தார். இதனால் இன்றைய டெஸ்டில் அவர் ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் அவருக்கு பெரிய அளவில் பிரச்சினை ஒன்றும் இல்லை. ஓய்வு எடுத்து வருகிறார். டெஸ்ட் தொடங்குவதற்குள் அவர் நல்ல நிலைக்கு திரும்பி விடுவார் என்று சக வீரர் டாம் லாதம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒரு வேளை வில்லியம்சன் உடல்தகுதி பெறாவிட்டால் ஹென்றி நிகோல்ஸ் இடம் பிடிப்பார்.

    இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘நியூசிலாந்து அணி வித்தியாசமான அணுகுமுறையுடன் இந்த டெஸ்டை எதிர்கொள்ளுமா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் எத்தகைய திட்டத்துடன் வந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய போதுமான திறமை எங்களிடம் இருக்கிறது’ என்று உற்சாகமாக தெரிவித்தார்.

    கொல்கத்தாவில், தற்போதைய வானிலை வீரர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இல்லை. இந்த போட்டியின் போது, சில சமயங்களில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளது.
    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: முரளிவிஜய், ஷிகர் தவான் அல்லது கவுதம் கம்பீர், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரோகித் சர்மா அல்லது ஜெயந்த் யாதவ் அல்லது அமித் மிஸ்ரா, அஸ்வின், விருத்திமான் சஹா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ்.

    நியூசிலாந்து: டாம் லாதம், மார்ட்டின் கப்தில், கனே வில்லியம்சன் (கேப்டன்) அல்லது ஹென்றி நிகோல்ஸ், ராஸ் டெய்லர், மிட்செல் சான்ட்னெர், லுக் ரோஞ்ச், வாட்லிங், ஜீத்தன் பட்டேல் அல்லது பிரேஸ்வெல், நீல் வாக்னெர், சோதி, டிரென்ட் பவுல்ட்.

    காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. 
    Next Story
    ×