search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எங்கள் அணியின் முக்கியமான வீரர் புஜாரா: பயிற்சியாளர் கும்பிளே
    X

    எங்கள் அணியின் முக்கியமான வீரர் புஜாரா: பயிற்சியாளர் கும்பிளே

    இந்திய டெஸ்ட் அணியில் மிக முக்கியமான வீரராக புஜாரா அங்கம் வகிப்பதாக பயிற்சியாளர் கும்பிளே கூறியுள்ளார்.
    கொல்கத்தா :

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை தொடங்குகிறது.

    முதலாவது டெஸ்டில் 4 பவுலர்களுடன் ஆடிய இந்திய அணி இந்த டெஸ்டில் 5 பவுலர்களுடன் களம் காண வாய்ப்பு இருக்கிறது. அது உறுதியானால், 5-வது பவுலராக சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இடம் பெறுவார். மிஸ்ரா நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.

    5 பவுலர் யுக்தி கடைபிடிக்கும் போது பேட்டிங் வரிசையில் சில தர்மசங்கடம் ஏற்படும். அதாவது கவுதம் கம்பீர் சேர்க்கப்பட்டால் ரோகித் சர்மா அல்லது ரஹானே ஆகியோரில் ஒருவர் கழற்றி விடப்படுவர். இல்லாவிட்டால் ரோகித் அல்லது ரஹானே ஆகியோரில் ஒருவரை தொடக்க வீரராக விளையாட வைத்து விட்டு, கம்பீரை வெளியே வைப்பார்கள். எது எப்படியோ, அணியில் ஆடும் லெவனுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே தாங்கள் பார்ப்பதாக தலைமை பயிற்சியாளர் அனில் கும்பிளே கூறியுள்ளார்.

    கும்பிளே நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:-

    வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது இந்திய வீரர் புஜாரா மந்தமாக ஆடியதாகவும், அவரது பேட்டிங் ஸ்டிரைக் ரேட் (சந்திக்கும் பந்துக்கு ஏற்ப எடுக்கப்படும் ரன்களின் சராசரி) மோசமாக இருந்ததாகவும் பலமாக விமர்சிக்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஸ்டிரைக் ரேட் என்பது பந்து வீச்சாளர்களை குறித்து பேசுவது தானே தவிர பேட்ஸ்மேன்களுக்குரியது அல்ல. 

    ஸ்டிரைக் ரேட் குறித்து தொடர்ச்சியாக பேசப்பட்டு வருவது எனக்கு ஆச்சரியமும் அதே சமயம் கொஞ்சம் ஏமாற்றமும் அளிக்கிறது. ஒரு வீரர் அணியின் நலன் கருதி சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும். அந்த பணியை புஜாரா நன்றாக செய்கிறார். அணியை சீரிய முறையில் முன்னெடுத்து செல்லும் எங்களது திட்டத்தில் மிக முக்கியமானவராக புஜாரா இருக்கிறார். தொடர்ந்து வெற்றிகரமான வீரராக அவர் வலம் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    அணியின் கண்ணோட்டத்தில் பார்த்தால் நிச்சயம் புஜாராவுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. சில ஆண்டுகளாக அவரது பங்களிப்பை பார்த்து வருகிறோம். கடந்த டெஸ்டில் கூட அவர் சிறப்பாக செயல்பட்டார். எனவே அணியில் யாருக்கும் எந்த நெருக்கடியும் இருப்பது போல் தெரியவில்லை. இந்த அணியின் சிறப்பே அது தான். ஒவ்வொருவருக்கும் முக்கிய பங்களிப்பும், பொறுப்பும் இருக்கிறது. ஆனால் நெருக்கடி கிடையாது.

    கவுதம் கம்பீர் அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களுக்கு ஏதாவது ஒன்று நடந்து விடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது எம்.விஜய்க்கு காயம் ஏற்பட்டது. தற்போதைய நடப்பு தொடரில் லோகேஷ் ராகுல் காயம் அடைந்துள்ளார். இது துரதிர்ஷ்டவசமான ஒன்று. முதலாவது டெஸ்டில் லோகேஷ் ராகுலின் பேட்டிங் அருமையாக இருந்தது.

    இவ்வாறு கும்பிளே கூறினார். 
    Next Story
    ×