search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியில் காம்பீர்: 2 ஆண்டுக்கு பிறகு தேர்வு
    X

    இந்திய அணியில் காம்பீர்: 2 ஆண்டுக்கு பிறகு தேர்வு

    முதல்தர போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய "கவுதம் காம்பீர்" நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி உள்ளார்.
    கொல்கத்தா:

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 197 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 30-ந்தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கவுதம் காம்பீர் இடம் பெற்றுள்ளார். தொடக்க வீரர் ராகுல் காயம் அடைந்துள்ளதால் அவருக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது.

    34 வயதான கவுதம் காம்பீர் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார். கடைசியாக 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்டில் விளையாடினார். தற்போது 25 மாதங்களுக்கு பிறகு அவர் கொல்கத்தாவில் நடைபெறும் டெஸ்டில் முரளி விஜய்யுடன் இணைந்து தொடக்க வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல்தர போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் அணிக்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு தேர்வாகி உள்ளார்.

    இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாக ஒருவர் கூறும்போது, தற்போதைய சூழ்நிலையில் காம்பீரை புறக்கணிப்பது சவாலானது. தற்போது அவரது பேட்டிங் நிலை சிறப்பாக இருக்கிறது. அனுபவமும் வாய்ந்தவர் அவர் அணிக்கு பரிந்துரை செய்ய வேண்டிய கட்டாயத்தை தனது ஆட்டம் மூலம் ஏற்படுத்தினார் என்றார்.

    துலீப் டிராபி போட்டியில் அவர் 5 ஆட்டத்தில் 356 ரன்கள் எடுத்தார். சராசரி 71.20 ஆகும். இடது கை ஆட்டக்காரரான காம்பீர் 56 டெஸ்டில் விளையாடி (100 இன்னிங்ஸ்) 4046 ரன் எடுத்துள்ளார். சராசரி 42.58 ஆகும். 9 சதமும், 21 அரை சதமும் எடுத்துள்ளார்.

    காம்பீர்-ஷேவாக் டெஸ்டில் தொடக்க ஜோடியாக விளையாடி 87 இன்னிங்சில் 4412 ரன் (2004-2012) எடுத்து உள்ளது. இந்த ஜோடி தான் தொடக்க விக்கெட்டுக்கு அதிக ரன் எடுத்த இந்திய ஜோடியாகும்.

    அனுபவம் வாய்ந்த அவருக்கு கொல்கத்தா டெஸ்டில் நிச்சயமாக 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கும் என்று தெரிகிறது.

    இதேபோல வேகப்பந்து வீரர் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக அரியானாவை சேர்ந்த புதுமுக சுழற்பந்து வீரர் ஜெயந்த் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிக்கன் குனியா சாய்ச்சல் காரணமாக இஷாந்த் சர்மா கான்பூர் டெஸ்டில் விளையாடவில்லை. இதில் இருந்து அவர் இன்னும் குணமாகததால் ஜெயந்த் யாதவுக்கு இடம் கிடைத்து உள்ளது.
    Next Story
    ×