search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். சாம்பியன் பட்டத்தை சென்னை அணி தக்க வைக்குமா?: பயிற்சியாளர் மெட்டராசி பேட்டி
    X

    ஐ.எஸ்.எல். சாம்பியன் பட்டத்தை சென்னை அணி தக்க வைக்குமா?: பயிற்சியாளர் மெட்டராசி பேட்டி

    வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் விலகி இருக்கும் நிலையில் சென்னையின் எப்.சி.அணி ஐ.எஸ்.எல். சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா? என்பதற்கு அந்த அணியின் பயிற்சியாளர் மெட்டராசி பதிலளித்தார்.
    சென்னை :

    8 அணிகள் இடையிலான 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி இந்தியாவில் வருகிற 1-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர் வெளியூர் அடிப்படையில் இரண்டு முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும்.

    கவுகாத்தியில் 1-ந் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் 2-ந் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டீ கொல்கத்தாவை சந்திக்கிறது. சென்னையின் எப்.சி. அணி தனது முதலாவது உள்ளூர் லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோசை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 6-ந் தேதி நடக்கிறது.

    இதையொட்டி இத்தாலியில் பயிற்சியில் ஈடுபட்ட நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணியினர் இரண்டு கட்டமாக சென்னை வந்து சேர்ந்தனர். கடைசியாக நேற்று முன்தினம் பயிற்சியாளர் மார்கோ மெட்டராசி (இத்தாலி) தலைமையில் வெளிநாட்டு வீரர்கள் ஜான் அர்னே ரைஸ் (நார்வே), பெர்னட் மென்டி (பிரான்ஸ்), டுவைன் கெர் (ஜமைக்கா), டேவிட் சுச்சி (இத்தாலி), மவுரிஜியோ பெலுசோ (இத்தாலி) ஆகியோர் சென்னை வந்தனர்.

    கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சென்னையின் எப்.சி. அணியில் இடம் பிடித்து இருந்த கொலம்பியாவை சேர்ந்த முன்கள வீரர் ஸ்டீவன் மென்டோஜா 13 கோல்கள் போட்டு, அதிக கோல் அடித்த வீரர் என்ற விருதை பெற்றதுடன், சென்னை அணியின் வெற்றியில் முதுகெலும்பாக விளங்கினார். அவர் தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் மேஜர் லீக் கால்பந்து தொடரில் நியூயார்க் சிட்டி அணிக்காக விளையாடி வருகிறார். இதனால் அவர் இந்த முறை சென்னை அணியில் இடம் பெறவில்லை.

    இதே போல் சென்னை அணியின் சிறந்த கோல் கீப்பராக ஜொலித்த எடெல் பெடே (அர்மேனியா) புனே அணிக்கு மாறி இருக்கிறார். எடெல் பெடேவுக்கு பதிலாக ஜமைக்காவை சேர்ந்த டுவைன் கெர் சென்னை அணியின் கோல் கீப்பராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். முத்திரை வீரரும், கேப்டனுமான பிரேசிலை சேர்ந்த இலானோவும் இந்த சீசனில் ஆடவில்லை. வெளிநாட்டு நட்சத்திர வீரர்களின் விலகல் மற்றும் அணி மாற்றம் ஆகியவை சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இத்தகைய சூழலில் சென்னையின் எப்.சி. அணி ஐ.எஸ்.எல். பட்டத்தை தக்க வைத்து கொள்ளுமா? என்று அதன் பயிற்சியாளரும், 2006-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இத்தாலி அணியில் இடம் பெற்றவருமான மார்கோ மெட்டராசியிடம் கேட்டதற்கு கூறியதாவது:-

    கடந்த ஆண்டு ஒரு கட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் பின்தங்கி இருந்த சென்னையின் எப்.சி. அணி சரிவில் இருந்து மீண்டு அரை இறுதிக்கு முன்னேறியதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று பிரமாதப்படுத்தியது. இதன் மூலம் எங்கள் அணியின் தரம் மற்றும் குணம் என்ன? என்பது எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். சாம்பியன் பட்ட வெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்கள். பட்டத்தை வெல்வதை விட அதனை தக்க வைத்து கொள்வது என்பது எப்பொழுதுமே கடினமான விஷயமாகும். இருப்பினும் எங்கள் அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    எல்லா அணிகளும் தங்களை வலுப்படுத்தி இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்தி விளையாட முடிவு செய்து இருக்கிறோம். குறுகிய காலத்தில் நடைபெறும் ஐ.எஸ்.எல். மிகுந்த போட்டி நிறைந்த தொடராகும். அரை இறுதிக்கு முன்னேற எல்லா அணிகளுக்கும் சம வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். அரை இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதே எங்களது முதல் இலக்காகும். அதன் பிறகே ‘நாக்-அவுட்’ சுற்று குறித்து சிந்திப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    Next Story
    ×