search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய மண்ணில் 250-வது டெஸ்ட்: கபில்தேவ் மணியடித்து தொடங்கி வைப்பார் - கங்குலி யோசனை
    X

    இந்திய மண்ணில் 250-வது டெஸ்ட்: கபில்தேவ் மணியடித்து தொடங்கி வைப்பார் - கங்குலி யோசனை

    இந்திய மண்ணில் நடைபெறும் 250-வது டெஸ்ட் போட்டியை கபில்தேவ் மணியடித்து தொடங்கி வைப்பார் என்று கங்குலி ஆலோசனை வழங்கியுள்ளார்.
    கொல்கத்தா:

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டி தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 197 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் இந்திய மண்ணில் நடைபெறும் 250-வது டெஸ்ட் ஆகும். இதையொட்டி கொல்கத்தா கிரிக்கெட் சங்கம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    250-வது டெஸ்டையொட்டி முன்னாள் பிரபல கேப்டன் கபில்தேவ் மணியடித்து போட்டியை தொடங்கி வைப்பார். லார்ட்ஸ் மைதானத்தை போல் முதல் முறையாக ஈடன்கார்டன் மைதானத்தில் மணியடித்து போட்டி தொடங்கி வைக்கப்படுகிறது. 2007-ம் ஆண்டு இந்த பராம்பரியம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    முன்னாள் கேப்டனும், பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குலியின் யோசனைப்படி தான் மணியடித்து போட்டி தொடங்கப்படுகிறது.

    இதுகுறித்து பெங்கால் கிரிக்கெட் சங்க இணை செயலாளர் அவிஷேக் டால்மியா கூறியதாவது:-

    கங்குலியின் யோசனைப்படி டெஸ்ட் போட்டியை கபில்தேவ் மணியடித்து தொடங்கி வைக்கிறார். இதற்கு அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். போட்டி நடைபெறும் 5 தினங்களிலும் முக்கிய பிரமுகர்கள் மணியடித்து தொடங்கி வைப்பார்கள். 5 நிமிடம் மணியடிக்கப்படும்.

    இதற்காக ஈடன் கடிகாரம் அருகே வெள்ளியால் பூசப்பட்ட மிகப்பெரிய மணி தொங்க விடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    250-வது டெஸ்டையொட்டி ‘டாஸ்’ போட தங்க நாணயத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு அணி வீரர்களுக்கும் வெள்ளி நாணயம் வழங்கி பாராட்டப்படுவார்கள். ஒவ்வொரு வெள்ளி நாணயத்தின் எடை 100 கிராம் ஆகும்.

    கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாக்கூர் அக்டோபர் 1-ந்தேதி கொல்கத்தா செல்வார். மறுநாள் அதாவது போட்டியின் 3-வது நாளில் பாராட்டு விழா நடைபெறும்.
    Next Story
    ×