search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடத்த வாய்ப்பு இல்லை: அனுராக் தாகூர் தகவல்
    X

    இந்தியாவில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடத்த வாய்ப்பு இல்லை: அனுராக் தாகூர் தகவல்

    இந்த சீசனில் இந்தியாவில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடத்த வாய்ப்பு இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.
    புதுடெல்லி :

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி, இந்தியா வந்து 5 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட இருக்கிறது. அடுத்து வங்காளதேசம் மற்றும் ஆஸ்திரேலியா அணி யும் வருகை தர இருக்கிறது. இந்த சீசனில் வருகிற மார்ச் மாதத்துக்குள் இந்திய அணி, உள்ளூரில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    இந்த சீசனில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை இளம் சிவப்பு நிற (பிங்க்) பந்தை பயன்படுத்தி இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்த முதலில் முடிவு செய்து இருந்தது. இதற்கு முன்னோட்டமாக துலீப் கோப்பை போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    பிங்க் பந்தை பயன்படுத்தி டெஸ்ட் போட்டியை (பகல்- இரவு) நடத்துவது குறித்து இப்போதே கருத்து சொல்வது சரியாக இருக்காது. துலீப் கோப்பை போட்டி மின்னொளியில் மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இருப்பினும் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் முன்பு எல்லா தரப்பு அம்சங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியது உள்ளது.

    பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த முடிவு செய்வதற்கு முன்பு பல விஷயங்களை பார்க்க வேண்டி இருக்கிறது. இந்த விஷயத்தில் அறிவியல் பூர்வமாக அணுக வேண்டியது உள்ளது. இந்த சீசனில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்தும் முடிவை எடுக்க நாங்கள் தயாராக இல்லை. பகல்-இரவு டெஸ்ட் போட்டி ரசிகர்களை எந்த அளவு கவரும்? என்பது உள்பட பல அம்சங்களை பார்த்து இறுதி முடிவு எடுக்க கால அவகாசம் தேவைப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×