search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    500-வது டெஸ்ட் போட்டி: 197 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
    X

    500-வது டெஸ்ட் போட்டி: 197 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 197 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    கான்பூர்:

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 318 ரன் எடுத்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 262 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. 56 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

    இதனால் நியூசிலாந்துக்கு 434 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன் எடுத்து இருந்தது. ரோஞ்சி 38 ரன்னும், சான்ட்னெர் 8 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தோல்வியை தவிர்க்க மேலும் 340 ரன் தேவை, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் நியூசிலாந்து தொடர்ந்து விளையாடியது.

    இந்திய அணி எஞ்சிய 6 விக்கெட்டை கைப்பற்றி வெற்றி பெறும் இலக்குடன் பந்துவீச்சை தொடர்ந்தது. ரோஞ்சி- சான்ட்னெர் ஜோடி இந்திய பந்துவீச்சை நம்பிக்கையுடன் விளையாடியது.

    ரோஞ்சி 83 பந்துகளில் 50 ரன்னை தொட்டார். இதில் 5 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். அஸ்வின், ஜடேஜா மாறி, மாறி பந்து வீசியும் இந்த ஜோடியை பிரிக்க சிரமப்பட்டனர். இந்த ஜோடி இணைந்து 207 பந்துகளில் 100 ரன்னை சேர்த்தது. 57 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்து இருந்தது.

    ஆட்டத்தின் 58-வது ஓவரில் இந்த ஜோடியை ஜடேஜா ஒரு வழியாக பிரித்தார். ரோஞ்சி அடித்த பந்தை அஸ்வின் கேட்ச் பிடித்தார். அவர் 120 பந்துகளில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 80 ரன்கள் எடுத்தார். அப்போது ஸ்கோர் 158 ஆக இருந்தது. 5-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 102 ரன் (36.1 ஓவர்) எடுத்தது.

    அடுத்து வாட்லின் களம் வந்தார். இந்த ஜோடியும் நேர்த்தியுடன் ஆடியது. சான்ட்னெர் 149 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் 50 ரன்னை எடுத்தார்.

    ஸ்கோர் 194 ஆக உயர்ந்தபோது இந்த ஜோடியை முகமது சமி பிரித்தார். வாட்லின் 18 ரன்னில் அவரது பந்து எல்.பி.டபிள்யூ ஆனார். நியூசிலாந்து அணியின் 7-வது விக்கெட்டையும் முகமது சமிதான் கைப்பற்றினார். மார்க் கிரேக் 1 ரன்னில் அவரது பந்தில் ‘போல்டு’ ஆனார். அப்போது நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 196 ஆக இருந்தது. அடுத்து சோதி களம் வந்தார். நியூசிலாந்து அணி 71.3-வது ஓவரில் 200 ரன்னை தொட்டது.

    மதிய உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 73 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன் எடுத்து இருந்தது.சான்ட்னெர் 57 ரன்னிலும், சோதி 2 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளைக்கு பிறகு நியூசிலாந்து அணியின் 8-வது விக்கெட் சரிந்தது. இந்திய பவுலர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த சான்ட்னெர் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். அவர் 179 பந்தில் 71 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

    இந்நிலையில் நியூசிலாந்து அணியின் எஞ்சிய 2 விக்கெட்டுகளையும் அஸ்வின் எளிதில் கைப்பற்ற நியூசிலாந்து 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதனால் 197 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று, 3 டெஸ்ட் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் 500 -வது டெஸ்ட் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2-வது இன்னிங்சல் அஸ்வின் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் அதிரடியாக விளையாடி அரைசதமும் அடித்த ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகின்ற வெள்ளிக்கிழமை (30ந்தேதி) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
    Next Story
    ×