search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சய் மஞ்ரேக்கரின் கனவு அணியில் கங்குலி, லஷ்மணன், கும்ப்ளேவிற்கு இடமில்லை: டோனி கேப்டன்
    X

    சஞ்சய் மஞ்ரேக்கரின் கனவு அணியில் கங்குலி, லஷ்மணன், கும்ப்ளேவிற்கு இடமில்லை: டோனி கேப்டன்

    இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கரின் கனவு அணியில் கங்குலி, லஷண்மன், கும்ப்ளே இடம்பெறவில்லை. டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.
    இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் உத்தர பிரதேசத்தில் உள்ள கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இது இந்தியாவின் 500-வது டெஸ்ட் போட்டியாகும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்குப் பிறகு 500-வது டெஸ்டில் விளையாடும் நான்காவது அணி இந்தியாவாகும்.

    இந்த டெஸ்டை இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பான வகையில் கொண்டாடி வருகிறது. அனைத்து முன்னாள் கேப்டன்களும் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள். அதன்பின் முன்னாள் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்தது உள்பட பல கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். மேலும், சில வீரர்கள் தங்களுக்கு பிடித்தமான இந்தியாவின் கனவு அணியை அறிவித்து வருகிறார்கள்.

    அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் துணைக்கண்டத்தில் விளையாடுவதற்கான தனது கனவு அணியை அறிவித்துள்ளார்.

    அந்த அணிக்கு டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். தொடக்க வீரர்களாக அதிரடி ஆட்டக்காரர் சேவாக் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். 3-வது வீரராக ராகுல் டிராவிட்டையும், 4-வது வீரராக சச்சின் தெண்டுல்கரையும் தேர்வு செய்துள்ளார். அதன்பின் குண்டப்பா விஸ்வநாதனையும், ஆல் ரவுண்டராக கபில்தேவைவும் தேர்வு செய்துள்ள அவர், கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக டோனியை தேர்வு செய்துள்ளார்.

    துணைக் கண்டத்தில் விளையாடுவதால் கபில்தேவ் உடன் ஜாகீர்கானை மட்டும் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்துள்ளார். பிஷன் சிங் பெடி, பிரசன்னா மற்றும் சந்திரசேகர் ஆகிய மூன்ற சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளார்.

    ஆனால் முன்னணி பேட்ஸ்மேன்களான கங்குலி மற்றும் லஷ்மண் ஆகியோருக்கு மஞ்ரேக்கர் இடம்கொடுக்கவில்லை.

    மஞ்ரேக்கரின் கனவு அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம்:-

    1. சுனில் கவாஸ்கர், 2. விரேந்தர் சேவாக், 3. ராகுல் டிராவிட், 4. சச்சின் தெண்டுல்கர், 5. குண்டப்பா விஸ்வநாத், 6. டோனி, 7. கபில்தேவ், 8. ஜாகீர்கான், 9. பிஷன் சிங் பெடி, 10. பிரசன்னா, 11. சந்திரசேகர்.
    Next Story
    ×