search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெஸ்சி ஆடாவிட்டாலும் பார்சிலோனாவிற்கு பாதிப்பில்லை: பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் சொல்கிறார்
    X

    மெஸ்சி ஆடாவிட்டாலும் பார்சிலோனாவிற்கு பாதிப்பில்லை: பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் சொல்கிறார்

    மெஸ்சி விளையாடா விட்டாலும் பார்சிலோனா அணிக்கு பாதிப்பில்லை என்று பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் கூறியுள்ளார்.
    ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் பார்சிலோனா. அந்த அணியில் அர்ஜென்டினாவின் முன்னணி வீரர் மெஸ்சி, பிரேசில் அணியின் நெய்மர் மற்றும் உருகுவே அணியின் சுவாரஸ் ஆகியோர் விளையாடி வருகிறார்கள். இந்த மூவர் கூட்டணியால் பார்சிலோனா வெற்றிமேல் வெற்றிகளை குவித்து வருகிறது.

    கடந்த புதன்கிழமை லாலிகா தொடரில் அட்லெடிகோ அணிக்கெதிராக விளையாடும்போது மெஸ்சிக்கு காயம் ஏற்பட்டது. இதனால் மூன்று வாரங்கள் மெஸ்சி விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பார்சிலோனா தற்போது லாலிகா மற்றும் கிளப் அணிகளுக்கு இடையிலான ஐரோப்பியன் சாம்பியன் லீக் ஆகிய இரண்டு தொடர்களில் விளையாடி வருகிறது. தற்போது ஷிடேன் தலைமையிலான ரியல் மாட்ரிட் அணி லாலிகாவில் கடும் நெருக்கடி கொடுத்து வருவதால் மெஸ்சி விளையாடாதது பார்சிலோனாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்பட்டது.

    ஆனால், மெஸ்சி விளையாடாமல் இருப்பது அணிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அந்த அணியின் பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் கூறியுள்ளார்.

    இதுகுறித்து மேலும் லூயிஸ் என்ரிக் கூறுகையில் ‘‘இதுபோன்ற சூழ்நிலை எங்களுக்கு ஏற்கனவே ஏற்பட்டுள்ளது. கடந்த சீசனில் மூன்று மாதங்களாக மெஸ்சி காயம் காரணமாக விளையாடவில்லை. அப்போது நாங்கள் 10 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்றோம். அதனால் மெஸ்சி இல்லாத நேரத்தில் நாங்கள் சிறந்த வீரர்களை கொண்டு அணியை வழிநடத்தி, அவர் இல்லாமல் சமாளித்துக் கொள்ள முடியும் என்பதை நிரூபித்து உள்ளோம்.

    ஒரு வீரருக்கு காயம் ஏற்படுவது மோசமான செய்திதான். அதுவும் சிறந்த வீரர் காயம் அடைவது மிகவும் மோசமான செய்தி. நாம் சாம்பியன் பட்டம் வெல்ல, இதுபோன்று முன்னணி வீரர் காயத்தில் இருக்கும் சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும்’’ என்றார்.

    கடந்த சீசனில் முழங்கால் காயத்தால் மெஸ்சி இரண்டு மாதங்கள் விளையாடவில்லை. அப்போது பார்சிலோனாவின் 23 கோல்களில் நெய்மர் மற்றும் சுவராஸ் ஆகியோர் இணைந்து 20 கோல்கள் அடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது மெஸ்சி ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு கோல்கள் அடித்துள்ளார். நான்கு கோல்கள் அடிக்க உதவியாக இருந்துள்ளார்.
    Next Story
    ×