search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைசி நேரத்தில் இந்திய அணியின் தேர்வாளர் வாய்ப்பை பறிகொடுத்த எஸ்.எஸ். தாஸ்
    X

    கடைசி நேரத்தில் இந்திய அணியின் தேர்வாளர் வாய்ப்பை பறிகொடுத்த எஸ்.எஸ். தாஸ்

    இந்திய அணியின் தேர்வாளர்களுக்கான பதவிக்கான போட்டியில் கடைசி நேரத்தில் வாய்ப்பை பறிகொடுத்துள்ளார் எஸ்.எஸ். தாஸ்.
    இந்திய அணியின் தலைமை தேர்வாளராக இருந்த சந்தீப் பட்டீலின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைந்தது. மேலும் இரண்டு பேரின் பதவிக்காலமும் முடிவடைந்ததால் அதற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டியிருந்தது.

    பி.சி.சி.ஐ.-யின் வழக்கமான முறைப்படி ஒவ்வொரு மண்டலத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், லோதா கமிட்டி தேர்வாளர்களை விண்ணப்பங்கள் பெற்று அதன் தகுதி அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.

    அதனால் பி.சி.சி.ஐ. தேர்வாளர் பதவிக்கு வர விரும்புவோர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்று கோரியிருந்தது. மேலும், இந்த பதவிக்கு விண்ணப்பிப்போர் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்று 5 வருடங்களுக்கு மேல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.

    இதன்படி எம்.எஸ்.கே. பிரசாத், ககன் கோடா, நயன் மோங்கியா, டோட்டா கணேஷ், அபேய் குருவில்லா, நிலேஷ் குல்கர்னி, மனிந்தர் சிங் மற்றும் விஜய் பரத்வாஜ் ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர்.

    இதில் பி.சி.சி.ஐ. எம்.எஸ்.கே. பிரசாத், ககன் கோடா மற்றும் எஸ்.எஸ். தாஸ் ஆகியோரை தேர்வு செய்தது. அவர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிலையில் எஸ்.எஸ். தாஸ் ஓய்வு குறித்து சந்தேகம் எழும்பியது. 38 வயதாகும் ஒடிசாவைச் சேர்ந்த எஸ்.எஸ். தாஸ். இந்திய அணிக்காக 23 டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடிள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பின் சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடவில்லை.

    அதேசமயம் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விதர்பா - டெல்லி அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ரஞ்சி போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டி ஜனவரி மாதம் 2013-ல் முடிவடைந்தது. இதனால் அவரது ஐந்தாண்டுகள் முடிவடையவில்லை. ஆகவே, தேர்வாளர் பதவி பறிபோகியுள்ளது. அவருக்குப் பதிலாக தேவங் காந்தி தேர்வாளராகியுள்ளார்.
    Next Story
    ×