search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கான்பூர் டெஸ்ட்: 3-வது நாளில் விரைவாக விக்கெட்டுக்களை இழந்தது நியூசி.; மதிய உணவு இடைவேளை வரை 238/5
    X

    கான்பூர் டெஸ்ட்: 3-வது நாளில் விரைவாக விக்கெட்டுக்களை இழந்தது நியூசி.; மதிய உணவு இடைவேளை வரை 238/5

    கான்பூர் டெஸ்டின் இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து விரைவாக விக்கெட்டுக்களை இழந்தது. மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் சேர்த்துள்ளது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் க்ரீன்பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. முரளி விஜய் 65 ரன்னும், புஜாரா 62 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணியின் போல்ட், சான்ட்னெர் தலா 3 விக்கெட்டும், வாக்னர் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் வில்லியம்சன் 65 ரன்னும், டாம் லாதம் 56 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். நேற்றைய தேனீர் இடைவேளைக்குப்பின் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. 54 ஓவர்களே வீசப்பட்டது. 36 ஓவர்கள் மழையால் பாதிப்புக்கு உள்ளானது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. நேற்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் இன்றைய போட்டி 15 நிமிடம் முன்னதாக தொடங்கியது. நியூசிலாந்து அணி தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடியது.

    நிலைத்து நின்று விளையாடிய இந்த ஜோடியை முன்னணி சுழற்பந்து வீரரான அஸ்வின் பிரித்தார். டாம் லாதம் 58 ரன்னில் அவரது பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 151 பந்துகளில் 5 பவுண்டரியுடன் லாதம் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 159 ஆக இருந்தது. 2-வது விக்கெட் ஜோடி 124 ரன் எடுத்தது.

    அடுத்து களம் வந்த முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். அவர் ரன் எதுவும் எடுக்காமல் ஜடேஜா பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அப்போது ஸ்கோர் 160 ஆக இருந்தது. 4-வது விக்கெட்டுக்கு வில்லியம்சுடன், ரோஞ்சி ஜோடி சேர்ந்தார்.

    சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த வில்லியம்சனையும் அஸ்வின் அவுட் செய்தார். அவர் 75 ரன்னில் ‘போல்டு’ ஆனார். 137 பந்துகளில் 7 பவுண்டரியுடன் வில்லியம்சன் இந்த ரன்னை எடுத்தார். அப்போது நியூசிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்து இருந்தது. அடுத்து சான்ட்னெர் களம் வந்தார்.



    இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. 23.3 ஓவர்கள் தாக்குப்பிடித்து 49 ரன்கள் எடுத்த இந்த ஜோடி  219 ரன் இருக்கும்போது பிரிந்தது. ரோஞ்சி 38 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

    6-வது விக்கெட்டுக்கு சான்ட்னெர் உடன் வாட்லிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் விளையாடியது. நியூசிலாந்து அணி 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. சான்ட்னெர் 26 ரன்னுடனும், வாட்லிங் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை நியூசிலாந்து அணி 80 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
    Next Story
    ×