search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல்., பிக் பாஷ் இளம் வீரர்களின் வளர்ச்சியை தடுக்காது: மெக்ராத் சொல்கிறார்
    X

    ஐ.பி.எல்., பிக் பாஷ் இளம் வீரர்களின் வளர்ச்சியை தடுக்காது: மெக்ராத் சொல்கிறார்

    ஐ.பி.எல்., பிக் பாஷ் போன்ற டி20 கிரிக்கெட் லீக் தொடர்கள் இளம் வீரர்களின் வளர்ச்சியை தடுக்காது என்று முன்னாள் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் தொடங்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகிறது. உலகளவில் இந்த தொடர் புகழ் பெற்று விளங்குகிறது. கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்படுகிறார்கள். ஒரு தொடரில் அவர்கள் சிறப்பாக விளையாடிவிட்டால் அவர்களின் சம்பளம் கோடி கணக்கில் எகிறிவிடும்.

    இந்திய அணியின் கேப்டன் டோனி, டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி போன்றோரின் சம்பளம் 10 கோடி ரூபாய்க்கு மேல் எகிறியுள்ளது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராவோ, கெய்ல், ரஸல் ஆஸ்திரேலிய அணியின் வாட்சன், இங்கிலாந்து அணியின் பீட்டர்சன் போன்றோரும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சர்வதேச அணியில் விளையாடுவதை விட இதுபோன்ற டி20 லீக் தொடரில்தான் விளையாட விரும்புகிறார்கள்.

    புதிதாக வரும் இளம் வீரர்கள் ஒன்றிரண்டு போட்டிகளில் ஜொலித்து விட்டால் அத்துடன் தங்களது திறமையை வளர்க்கும் முயற்சியை நிறுத்தி விடுகிறார்கள். ஆகையால் இதுபோன்ற டி20 லீக் தொடர்களால் இளம் வீரர்களின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ஆனால், இந்த தொடர்களால் இளம் வீரர்கள் வளர்ச்சி தடுக்கப்படுவதில்லை என்று மெக்ராத் கூறியுள்ளார். இதுகுறுத்து மேலும் மெக்ராத் கூறுகையில் ‘‘ஐ.பி.எல். அல்லது பிக் பாஷ் லீக் தொடரால் இளம் கிரிக்கெட் வீரர்களின் திறமை அழிந்து விடுகிறது என்று நான் நினைக்கவில்லை. தங்களுடைய சிறந்த ஆட்டத்தை கொடுக்க 100 சதவீதம் உழைக்கிறார்கள். எந்தவொரு வீரரும் தங்களது ஆட்டத்திறன் மிகவும் சிறந்தது என்று எண்ணிவிடக் கூடாது என்பது முக்கியமான விஷயம். அப்படி இருந்தால்தான் அவர்களால் வளர்ச்சி அடைய முடியும்’’ என்றார்.

    இதற்கு முன் விரைவாக பணம் குவிக்கும் இடமாக இருக்கும் இதுபோன்ற தொடர்களில் விளையாடுவதால் வேகப்பந்து வீச்சாளர்களின் வளர்ச்சி தடைபடுகிறது என்று கூறியிருந்தார். தற்போது அந்த கருத்தில் இருந்து மெக்ராத் மாறியுள்ளார்.

    உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களின் ஒருவராக கருதப்படும் மெக்ராத், 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 563 விக்கெட்டுக்களும், 250 ஒருநாள் போட்டிக்கு மேல் விளையாடி 381 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.
    Next Story
    ×