search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிக்கெட் தைரியமாக விளையாட வேண்டுமெனில் ரிஸ்க் எடுப்பது அவசியம்: விராட் கோலி
    X

    கிரிக்கெட் தைரியமாக விளையாட வேண்டுமெனில் ரிஸ்க் எடுப்பது அவசியம்: விராட் கோலி

    கிரிக்கெட் தைரியமாக விளையாட வேண்டுமென்றால் ரிஸ்க் எடுப்பது அவசியம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    கான்பூர்:

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி நாளை கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் ஷிகார் தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    பந்துவீச்சில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முக்கிய பங்கு வகிப்பார். மேலும் ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் உள்ளனர். இதனால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்தியா சமபலத்துடன் திகழ்கிறது.எனினும் இந்திய பேட்ஸ்மேன்களைப்  பொறுத்தவரை சுழற்பந்து வீச்சுக்கு எளிதாக விக்கெட்டைப் பறிகொடுக்கும் சூழல் உள்ளது.

    இதுகுறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில் ''சுழற்பந்துவீச்சு கவலை கொள்ளக்கூடிய ஒரு விஷயமல்ல. ஆனால் அதனை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.பேட்டிங் திட்டங்கள் எதையும் மாற்றவில்லை ஆனால் எங்களது தவறுகளை குறைத்து கொள்வோம். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நீண்ட நேரம் பேட்டிங் செய்ய தற்போது நாங்கள் பயிற்சி எடுத்து வருகிறோம்.

    கிரிக்கெட்டை பொறுத்தவரை சின்ன சின்ன விஷயங்களிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இதில் நல்ல விஷயம் என்னவென்றால் நிறைய கிரிக்கெட் தொடர்களை நாங்கள் விளையாடி இருக்கிறோம் என்பதுதான்.

    இங்கிலாந்து, நியுசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளுடன் விளையாடும்போது வேகப்பந்துவீச்சில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். இதனால் சுழற்பந்து வீச்சுக்கு அந்தளவு கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஏதாவது ஒரு பகுதியில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும் என நினைத்தால் அதற்காக நிறைய உழைக்கத் தயங்க மாட்டோம்.

    மேட்ச் நடைபெறும் பிட்சில் ஒவ்வொரு முறை வீரர்கள் கால் வைக்கும்போதும் இதே நிலையில் அடுத்த 10 வருடங்களுக்கு விளையாட வேண்டும் என உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ள வேண்டும். இதனால் மன அழுத்தமின்றி நீங்கள் நம்பிக்கையுடன் விளையாட முடியும். கிரிக்கெட் தைரியமாக விளையாட வேண்டுமெனில் ரிஸ்க் எடுப்பது அவசியம்.

    இவ்வாறு விராட் கோலி கூறினார்.

    Next Story
    ×