search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    154 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் டொக்கு வைத்து சாதனைப்படைத்த ஆஸ்திரேலியா
    X

    154 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் டொக்கு வைத்து சாதனைப்படைத்த ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலியாவின் நெவில், ஓ'கீபே மற்றும் ஹசில்வுட் ஆகியோர் 154 பந்துகளை சந்தித்து ஒரு ரன்கள் கூட எடுக்காமல் சாதனைப் படைத்துள்ளனர்.
    இலங்கை அணிக்கெதிராக பல்லேகெலேயில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி 268 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பயணம் செய்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 56.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்திருந்தது.

    9-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் நெவில் உடன் சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபே ஜோடி சேர்ந்தார். அப்போது நெவில் 26 பந்தில் 9 ரன்கள் எடுத்திருந்தார். இருவரும் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் கப்பல் போன்று நிலையாக நின்று விக்கெட்டுக்களை பாதுகாத்தனர்.

    ஓ'கீபே 63-வது ஓவரின் 5-வது பந்தில் தான் சந்தித்த 22-வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். அதன்பின் அவர் ஒரு ரன் கூட அடிக்கவில்லை. நெவிலும் ஒரு ரன்கள் கூட அடிக்கவில்லை. 63-வது ஓவருக்குப்பின் 85-வது ஓவர் வரை ஒரு ரன் கூட அடிக்காமல் தொடர்ந்து 22 ஓவர்களை மெய்டனாக்கினார். இவர்கள் இருவரும் களத்தில் நிற்க நிற்க இலங்கை அணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் பல்லேகெலேயில் மழை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. கருமேகம் அவ்வப்போது மைதானத்தை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. இதனால் எப்போது வேண்டுமென்றாலும் ஆட்டம் நிறுத்தப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே ஹெராத், பெரேரா, டி சில்வா, பிரதீப் மற்றும் சண்டகான் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் மனதை தளரவிடாமல் தங்கள் நேர்த்தியான பந்துகளை அம்பாக தொடுத்துக்கொண்டே இருந்தனர். இதற்கு 86-வது ஓவரின் 5-வது பந்தில்தான் பலன் கிடைத்தது. டி சில்வா வீசிய பந்தில் நெவில் அவுட் ஆனார். அவர் 130 நிமிடங்கள் நின்று 115 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    துணை பிரிந்த சோகத்தில் ஓ'கீபேயும் 89-வது ஓவரில் ஹெராத் பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 105 நிமிடங்கள் நின்று 98 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் எடுத்தார். இவர் விக்கெட்டுடன் இலங்கை அணி வெற்றி பெற்றது.

    இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 178 பந்துகளை சந்தித்து (29.5 ஓவர்கள்) 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. நெவில் அவுட்டானதும், ஓ'கீபே 98 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதனால் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 161 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஆகவே, இலங்கை அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    63-வது ஓவரின் கடைசி பந்தில் இருந்து ஆல் அவுட் ஆன 88.3 ஓவர் வரை ஆஸ்திரேலியா ஒரு ரன் கூட அடிக்கவில்லை. இதனால் ஆஸ்திரேலியா 154 பந்துகளில் (25 ஓவர் மற்றும் 4 பந்துகள்) தொடர்ந்து ரன் எடுக்காமல் இருந்து சாதனைப்படைத்துள்ளது.

    இதற்கு முன் எந்தவொரு அணியும் இப்படி அதிக பந்துகளை சந்தித்து ரன் எடுக்காமல் இருந்தது கிடையாது.
    Next Story
    ×