search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஆர்.சதீஷ், மகேஷ் அஸ்வின்: திண்டுக்கல் முரளிவிஜய்
    X

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஆர்.சதீஷ், மகேஷ் அஸ்வின்: திண்டுக்கல் முரளிவிஜய்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஆர்.சதீஷ், மகேஷ் அஸ்வின், திண்டுக்கல் அணியில் முரளிவிஜய், கோவை அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஐ.பி.எல். பாணியில் முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.

    இந்த போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி முதல் செப்டம்பர் 18-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    ரூ.3½ கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டி சென்னை சேப்பாக்கம், நத்தம், திருநெல்வேலி ஆகிய 3 இடங்களில் நடக்கிறது.

    இதில் தென்சென்னை அணியான ‘சேப்பாக் சூப்பர் கில்லீஸ்’, டியூட்டி பேட்ரியாட்ஸ் (தூத்துக்குடி), கோவை கிங்ஸ், மதுரை, ரூபி காஞ்சி வாரியர்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    8 அணிகளுக்கான வீரர்கள் ஒதுக்கீடு நிகழ்ச்சி இன்று காலை 10.30 சென்னை அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கியது.

    இந்த போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்த வீரர்களில் இருந்து 888 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

    இந்த பட்டியலில் இருந்து வீரர்கள் அணிக்கு ஒதுக்கீடு செய்யப்படுவர். ஒரு அணி 17 முதல் 19 வீரர்களை தேர்வு செய்யலாம்.

    வீரர்கள் ஒதுக்கீடு நிகழ்ச்சியில் ‘சேப்பாக் சூப்பர் கில்லீஸ்’ அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன், பயிற்சியாளர் ஹேமங்பதானி மற்றும் மற்ற அணிகளின் உரிமையாளர்களான ஆல்பர்ட் முரளிதரன் (தூத்துக்குடி), ராஜு மகாலிங்கம் (கோவை), ரபீக் அகமது (மதுரை), ரூபி மனோகரன் (காஞ்சீபுரம்), வி.பி.சந்திரசேகர் (திருவள்ளூர்), சீனிவாசன் (திண்டுக்கல்), ஹரிகரன் (காரைக்குடி) மற்றும் பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முதல் சுற்றில் ஒவ்வொரு அணியிலும் 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் முதல் வீரராக ஆர்.சதீஷ் தேர்வு செய்யப்பட்டார். பேட்ஸ்மேனான இவர் திருச்சியை சேர்ந்தவர். ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடி வருகிறார்.

    2-வது வீரராக மகேஷ், 3-வது வீரராக தலைவன் சற்குணம், 4-வது வீரராக அந்தோணிதாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்திய சீனியர் அணியில் விளையாடி வரும் ஆர். அஸ்வினை திண்டுக்கல் அணி தேர்வு செய்தது. முருகன் அஸ்வின், நடராஜன், சஞ்சய் ஆகியோரும் அந்த அணியில் தேர்வு செய்யப்பட்டனர்.

    தூத்துக்குடி அணியில் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் கிறிஸ்டல், அபினவ் முகுந்த் ஆகியோரை அந்த அணி தேர்வு செய்தது.

    கோவை அணியில் இந்திய டெஸ்ட் தொடக்க வீரர் முரளிவிஜய் தேர்வானார். மேலும் செய்யது முகமது, எம்.முகமது, சூரியபிரகாஷ் ஆகியோரும் தேர்வு ஆனார்கள்.

    மதுரை அணியில் அருண் கார்த்திக், சுரேஷ்குமார், தியாகராஜன், பிரான்சிஸ், ராக்கின்ஸ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

    காஞ்சீபுரம் அணியில் பாபா இந்திரஜித், கவுசிக், ஜேசுராஜ், ஷாருக்கான் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

    திருவள்ளூர் அணியில் பாபா அபராஜிதர், அபிஷேக் தன்வார், ரகில்ஷா, கவின் ஆகியோரும் காரைக்குடி அணியில் பத்ரிநாத், அனிருதா, சுனில்சாம், சுரேஷ்பாபு ஆகியோரும் தேர்வு பெற்றனர்.

    2-வது சுற்று முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு தேர்வு செய்ய வீரர்கள் வருமாறு:– கோபிநாத், சாய்கிஷோர், சசிதேவ், ஜோயல் ஜோசப்.

    இதே போல் 2–வது சுற்றில் மற்ற அணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் விவரம் வருமாறு:–

    அஷிசிக் சீனிவாஸ், கவுசிக் காந்தி, எல்.பாலாஜி, ஆனந்த் சுப்பிரமணியன் (தூத்துக்குடி), விஜய் சங்கர், சிவக்குமார், ரோகித், விக்னேஷ் (கோவை), சந்திர சேகர், விக்னேஷ் கணபதி, ராஜா, சாகீத் சந்திரன் (மதுரை), பரத்சங்கர், பிரதீபன், வருண்குமார், பிரபு (காஞ்சீபுரம்), சதுருவேக், மலோலன் ரங்கராஜன், ரோகித், ஜெகநாத் சீனிவாஸ் (திருவள்ளூர்), ஜெகதீசன், கங்கஸ்ரீதர் ராஜு, சுப்பிரமணியசிவா, சன்னிகுமார் சிங் (திண்டுக்கல்), லோகேஷ்வர், சி.கணபதி, சோயிப் கான், விஷால் வைத்தியா (காரைக்குடி) ஆகியோர் தேர்வு பெற்றனர்.

    வீரர்கள் ஒதுக்கீடு குறித்து போட்டி அமைப்புக்குழு சேர்மன் பி.எஸ்.ராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

    வீரர்கள் ஒதுக்கீடு முறை 8 சுற்றுகளை கொண்டது. ஒவ்வொரு அணியும் 19 வீரர்கள் வரை தேர்வு செய்யலாம். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்த வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    வெளியூரில் பிறந்து சென்னையில் விளையாடி வரும் 25 வீரர்கள் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் விளையாட கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டு உள்ளோம். அனுமதி கிடைத்ததும் 25 வீரர்களும் ஒதுக்கீடு செய்யப்படுவார்கள்.

    இதில் ஒவ்வொரு அணியும் 2 பேரை தேர்வு செய்யலாம். மாவட்ட அளவில் வீரர்களை உருவாக்க இப்போட்டி நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது துணைத் தலைவர் ராகவன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் கே.எஸ்.விசுவநாதன், பொருளாளர் நரசிம்மன் உடன் இருந்தனர்.

    இந்திய சீனியர் அணிக்காக விளையாடிய வீரர்களுக்கு ரூ.5 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.3 லட்சம் எனவும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு ரூ.2½ லட்சம், ரூ.2 லட்சம், ரூ.1½ லட்சம் எனவும் மற்ற வீரர்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×